பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்


பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Feb 2017 3:45 AM IST (Updated: 12 Feb 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிக்கு தனி அலுவலர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் அறிவுறுத்தி உள்ளார். ஆய்வு கூட்டம் சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்

சேலம்,

பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிக்கு தனி அலுவலர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் அறிவுறுத்தி உள்ளார்.

ஆய்வு கூட்டம்

சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சந்திரமோகன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வேளாண்மை இணை இயக்குனர் சவுந்தரராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமதுரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடிநீர் தேவை

இந்த கூட்டம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சேலம் மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் நீர் மட்ட அளவுகள் துல்லியமாக கணக்கீடு செய்திடவும், தண்ணீர் தேவைப்படும் இடங்களில் நாள் ஒன்றிற்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பது குறித்த கணக்கீட்டினை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகளுக்கு கோடைகாலத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட தனி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தண்ணீர் அதிகமாக கிடைக்கும் இடங்களில் இருந்து தேவைப்படும் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு சென்று வினியோகிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அதற்கு தேவையான போதிய அளவு நிதி தொடர்புடைய துறைக்கு வழங்கப்பட்டு உள்ளது.

விழிப்புணர்வு நடவடிக்கைகள்

குடிநீரின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் தண்ணீர் தேவை குறித்து அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம், நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story