நம்பியூர் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 2 ஆடுகள் சாவு


நம்பியூர் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 2 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 12 Feb 2017 3:33 AM IST (Updated: 12 Feb 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 2 ஆடுகள் இறந்தன.

விவசாயி

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 43). விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் 10 ஆடுகள் மற்றும் 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இவருடைய வீடு தோட்டத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு ஆடு மற்றும் மாடுகளுக்கு தீவனங்கள் வைத்துவிட்டு வீட்டுக்கு தூங்க சென்று விட்டார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் முருகேசனின் தோட்டத்தில் உள்ள ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் முருகேசனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

2 ஆடுகள் சாவு

உடனே அவர் தன்னுடைய தோட்டத்துக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிகாலை நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த மர்ம விலங்கு அங்கு கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடித்து குதறிவிட்டு அங்கிருந்து சென்றது, தெரியவந்தது.

இதுபற்றி அறிந்ததும் டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆட்டை பார்வையிட்டதுடன், அங்கு பதிவான விலங்கின் கால் தடத்தையும் ஆய்வு செய்தனர். இதேபோல் கடந்த 6 நாட்களுக்கு முன்பு நம்பியூர் அருகே உள்ள கொன்னமடையை சேர்ந்த விவசாயியான சுப்பிரமணியத்தின் 3 எருமை கன்றுக்குட்டிகளை மர்ம விலங்கு கடித்து குதறி கொன்று உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story