பெங்களூருவில் 5 வயது சிறுமியின் ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்திய ஆசிரியை
பெங்களூருவில், 5 வயது சிறுமியின் ஆடையை அவிழ்த்து தனியார் பள்ளி ஆசிரியை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பெங்களூரு,
பெங்களூருவில், 5 வயது சிறுமியின் ஆடையை அவிழ்த்து தனியார் பள்ளி ஆசிரியை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கர்நாடக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தனியார் பள்ளிக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது.
தனியார் நர்சரி பள்ளிபெங்களூரு அல்சூரில் தனியாருக்கு சொந்தமான நர்சரி பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பயிலும் மாணவியான 5 வயது சிறுமியை ஆசிரியை ஒருவர் அடிக்கடி அடித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், பயந்துபோன சிறுமி பள்ளி செல்ல மாட்டேன் என தினமும் கூறி தனது தாயிடம் அழுதாள். மேலும், ஆசிரியை அடிப்பதாக அவள் தனது தாயிடம் கூறினாள்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியையை சந்தித்து பேசியுள்ளார். அப்போது சிறுமியை அடிக்க வேண்டாம் என அவர் ஆசிரியையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ஆசிரியை தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் சிறுமியை தேவையில்லாமல் மீண்டும் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2–வது முறையாகவும் சிறுமியின் தாய் பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம் பேசியுள்ளார்.
அவமானப்படுத்திய ஆசிரியைஇந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளியில் பயிலும் மற்ற குழந்தைகளின் முன்னிலையில் 5 வயது சிறுமியின் ஆடையை அவிழ்த்து அந்த ஆசிரியை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. அத்துடன், இருட்டு அறையில் அடைத்து வைத்து நாயை விட்டு கடிக்க விடுவதாகவும் அவர் சிறுமியை மிரட்டியுள்ளதாக தெரிகிறது.
இதனால், அந்த சிறுமி மேலும் மனம் உடைந்தாள். இதுகுறித்தும் அவள் தனது தாயிடம் கூறினாள். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் பள்ளிக்கு சென்று ஆசிரியையை கண்டித்ததோடு, பள்ளி முதல்வரிடமும் சம்பவம் குறித்து புகார் அளித்தார். ஆனால், அவருடைய புகாரை பள்ளி முதல்வர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
குற்றச்சாட்டுஇந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் தனியார் பள்ளி ஆசிரியர், முதல்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
“எனது 5 வயது மகள் தனியார் நர்சரி பள்ளியில் படித்து வருகிறாள். இவள், பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடிக்கடி அழுதாள். இதுபற்றி எனது மகளிடம் விசாரித்தபோது பள்ளி ஆசிரியை ஒருவர் மற்ற குழந்தைகளின் முன்னிலையில் அவளை அடித்ததோடு, அவளுடைய ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்தியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக பள்ளிக்கு 3 முறை சென்று ஆசிரியையிடம் விசாரித்ததோடு, சம்பவம் குறித்து பள்ளி முதல்வரிடமும் புகார் அளித்தேன். ஆனால், எனது புகாரை பள்ளி முதல்வர் மறுத்துவிட்டார்.“
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்கு நோட்டீசுமாணவியின் தாய் முகநூலில் பதிவேற்றிய இந்த பதிவின் மூலம் தனியார் பள்ளிக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே, சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமியின் தாய், கர்நாடக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கர்நாடக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் விசாரணையை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக கர்நாடக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன், தனியார் பள்ளிக்கு சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.