காங்கிரஸ் அரசு பற்றி குறை கூற என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை நாராயணசாமி கடும் தாக்கு


காங்கிரஸ் அரசு பற்றி குறை கூற என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை நாராயணசாமி கடும் தாக்கு
x
தினத்தந்தி 12 Feb 2017 4:45 AM IST (Updated: 12 Feb 2017 4:11 AM IST)
t-max-icont-min-icon

புதுவையை குட்டிச்சுவராக்கியவர்கள்: காங்கிரஸ் அரசு பற்றி குறை கூற என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை நாராயணசாமி கடும் தாக்கு

புதுச்சேரி,

புதுவையை குட்டிச் சுவராக்கிய என்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கு காங்கிரஸ் அரசு பற்றி குறை கூற தகுதி இல்லை என்று நாராயணசாமி காட்டமாக கூறினார். புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

வறட்சி தாண்டவம்

காரைக்கால் பகுதிக்கு சென்று வறட்சி பாதித்த பகுதிகளை அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோருடன் சென்று பார்த்தேன். காவிரி நீர் கிடைக்காததாலும், பருவமழை பொய்த்து விட்டதாலும் விளைநிலங்கள் எல்லாம் தரிசாக கிடக்கின்றன. காரைக்கால் முழுவதும் வறட்சி தாண்டவமாடுகிறது. விவசாய கூலிகளுக்கு வேலை இல்லாத நிலை. நாங்கள் சந்தித்த விவசாய கூலிகள் குறிப்பாக பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும், நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

புதுவையிலும் விளைச்சல் குறைவாக உள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட காரைக்கால், புதுவை விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்.

ஏற்றுமதி, இறக்குமதி ஒப்பந்தம்

புதுவையை இணை துறைமுகமாக பாவித்து சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை இங்கு கொண்டு வந்து தென்மாநிலங்களுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த புதுவை அரசும், சென்னை துறைமுகமும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட பேச்சுவார்த்தை நடத்தினோம். மத்திய அரசின் உத்தரவால் இது தொடர்பான ஒப்பந்த நகல் புதுவை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது என முடிவு செய்தோம். டெல்லியில் வைத்து அடுத்த வாரம் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளது. இதன் மூலம் புதுவை துறைமுகத்தில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறும் என்பதால் மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ரெயில்வே பணிகள் வேகமாக நடைபெறும். தென்மாநிலங்களுக்கு சரக்குகள் உடனடியாக கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு ஆண்டும் துறைமுகத்தில் தூர்வாரும் பணியை சென்னை துறைமுக கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது. மாநிலத்திற்கு நிதியும் வழங்குவதாக தெரிவித்து உள்ளனர்.

துறைமுகத்தை தூர்வாரும் பிரச்சினை

புதுவை துறைமுக முகத்துவாரம் டிரஜிங் கார்பரேசன் மூலமாக மணலை வாரி துறைமுகத்தை தூர்வாரும் பணி தொடங்கிய போதே அந்த எந்திரம் பழுதாகி விட்டது. இதனால் அந்த பணியில் இன்னும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. துறைமுகம் தூர்வாரும் பணி தாமதம் ஆனதற்கு டிரஜிங் கம்பெனி தான் காரணம். மணலை தூர்வாராததால் அரசுக்கு அந்த நிறுவனம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோர உள்ளோம். இது குறித்து கவர்னருக்கு கோப்பு அனுப்பி உள்ளோம்.

கடந்த 5 ஆண்டுகால என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அனைத்து திட்டங்களையும் தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம். நாம் தொடர்ந்து வலியுறுத்துவதாலும், நியாயமான கோரிக்கைகள் என்பதாலும் நிதி வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இம்மாத இறுதியில், அல்லது அடுத்த மாதத்தில் நிதி கிடைக்கும். கண்டிப்பாக நிதியை பெறுவோம்.

என்.ஆர்.காங்கிரசுக்கு தகுதி இல்லை

கடந்த 5 ஆண்டுகளாக திறமை இல்லாத ஆட்சி நடத்தியவர்கள், தங்களது ஆட்சி எப்போது வரும் என்று புதுவை மக்கள் ஏங்குவதாக கூறுவது இந்த நூற்றாண்டின் நகைச்சுவை ஆகும். என்னை பொறுத்தவரை முதல்-அமைச்சர் நாற்காலி என்பது முள்நாற்காலி போன்றது. எங்களுக்கு யார் மீதும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு கிடையாது. புதுவையில் எங்களை குறை சொல்ல அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு உரிமை உள்ளது. ஆனால் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அந்த தகுதி இல்லை.

புதுவையை குட்டிச்சுவராக ஆக்கியது அவர்கள் தான். மக்களின் நலத்திட்டங்களை நிறைவேற்ற ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் எதிர்கட்சியினர் சட்டசபைக்கு வருவது இல்லை. இனியும் மக்கள் அவர்களை நம்பத் தயாராக இல்லை.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

தமிழக அரசியலை கவனிக்கிறோம்

மேலும் அவர் கூறுகையில், ‘தமிழக அரசியல் நிலை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்த விவரகாரத்தில் தமிழக கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும்.’ என்றார்.

பேட்டியின் போது அமைச்சர் கந்தசாமி, அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் உட னிருந்தனர்

Next Story