பெரியகுப்பம், எண்ணூரிலும் கடற்கரை மணல் பரப்பில் டீசல் படலம் ஒதுங்கியதால் மீனவர்கள் அச்சம்
பெரியகுப்பம், எண்ணூரிலும் கடற்கரை மணல் பரப்பில் டீசல் படலம் கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
திருவொற்றியூர்,
மணல் பரப்பில் டீசல் படலம்
எண்ணூர் துறைமுகம் அருகே இரு சரக்கு கப்பல்கள் மோதிய விபத்தில் ஒரு சரக்கு கப்பலில் இருந்த டீசல் கடலில் கொட்டி பரவியது. திருவொற்றியூர் பாரதியார் நகரில் கடலில் படிந்த டீசல் படலத்தை 1,500–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 13 நாட்கள் போராடி முழுமையாக அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையில் திருவொற்றியூர் அருகே உள்ள ராமகிருஷ்ணா நகரில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் கடற்கரை மணல் பரப்பில் சிறிய அளவில் டீசல் படலம் ஒதுங்கியது. அதை தனியார் நிறுவன ஊழியர்கள் மின்மோட்டார் மூலம் அகற்றினர்.
எம்.எல்.ஏ.விடம் கோரிக்கைஇந்தநிலையில் அதன் அருகில் உள்ள பெரியகுப்பம், சின்னகுப்பம், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடற்கரை மணல் பரப்பில் டீசல் படலம் கரை ஒதுங்கி உள்ளது. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். காற்று திசை மாறி வீசும் போது அதன் வேகத்தில் கடலில் படிந்து உள்ள டீசல் படலம் மற்ற பகுதிகளுக்கும் பரவி கரை ஒதுங்கி உள்ளது.
இதனால் படகு மற்றும் வலைகள் சேதமடையும் நிலை உள்ளதால் கடல் பரப்பில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் டீசல் படலத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமியிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக அவர், சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளை தொடர்பு கொண்டு கடற்கரை மணலில் தேங்கி உள்ள டீசல் படலத்தை அகற்றி மீனவர்கள் தொழில் செய்ய வகை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.