மாற்றுத்திறனாளி மாணவ – மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள்
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் நடந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் நடந்தது. போட்டியை மதுரை மண்டல விளையாட்டுத்துறை முதுநிலை மேலாளர் புகழேந்தி தொடங்கி வைத்தார். அனைவருக்கும் இடைநிலை கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கையுந்துப்பந்து பயிற்சியாளர் முனுசாமி வரவேற்றார்.
போட்டியானது 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை, 9 முதல் 10–ம் வகுப்பு வரை, பிளஸ்–1 முதல் பிளஸ்–2 வரை என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நின்ற நிலையில் தாண்டுதல், டென்னிஸ் பந்து எறிதல், மென்பந்து எறிதல் ஆகிய போட்டிகள் நடந்தன. காதுகேளாதோர், உடல் ஊனமுற்றோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் திருவண்ணாமலை, செய்யாறு கல்வி மாவட்டங்களில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.