ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் தமிழருவி மணியன் பேட்டி
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோவையில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.
காந்திய மக்கள் இயக்க மாநில பொதுக்குழு கூட்டம் கோவை சிங்காநல்லூரில் நேற்று நடந்தது. இதற்கு தலைவர் தமிழருவி மணியன் தலைமை தாங்கினார். இதில், மாநில நிர்வாகிகள் டென்னிஸ்கோவில் பிள்ளை, கணேசன், பாலாஜி, தேவராஜன், துரை சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் தமிழருவி மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:?–
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றதை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சசிகலாவை ஒப்பிடும் போது ஓ.பன்னீர்செல்வம் நல்லவர். இதனால் அவருக்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முதல்–அமைச்சர் யார் என்பதை முடிவு செய்வதில் தமிழக கவர்னர் நியாயமாக செயல்படுகிறார்.
இன்னும் சில நாட்களில் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. அதில் சசிகலாவுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் தமிழகத்தில் அசாதாரண நிலை உருவாகும். அப்போது சசிகலாவுடன் இருப்பவர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வந்து விடுவார்கள்.
நீதி விசாரணைதற்போது எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டு குதிரை பேரம் அரங்கேறி வருகிறது. நிலையான ஆட்சி இல்லாததால் மாநிலத்தில் குழப்பமான நிலை உள்ளது. முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மிரட்டி பணிய வைக்கப்பட்டார் என்பதை கணக்கில் கொண்டு அவருக்கு சட்டமன்றத்தில் தன் பலத்தை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் இன்று வரை வெளிச்சத்துக்கு வரவில்லை. எனவே இது குறித்து சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியின் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீர்மானங்கள்முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம், இயற்கை வளங்களை சுரண்டுதலை தடுத்தல், பொது வாழ்வில் எளிமை, நேர்மையாக செயலாற்ற அரசியலுக்கு மாணவர் ஆற்றல் பயன்பட வேண்டும். ஆன்லைன் வாக்குப்பதிவு செய்யும் முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும். விவசாயிகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை பொருளாதார பின்னடைவுக்கே வழி வகுத்துள்ளது. கல்வித்துறையை மீண்டும் மாநிலங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். பவானி ஆற்றில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.