‘சசிகலாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது’ பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி


‘சசிகலாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது’ பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2017 3:30 AM IST (Updated: 13 Feb 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

சசிகலாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று பாரதீய ஜனதா பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை

மக்கள் சேவை மையம் சார்பில், கோவை செல்வபுரத்தில் தங்க நகை தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் சேவை மைய நிறுவன தலைவரும், பாரதீய ஜனதாவின் மாநில பொதுச்செயலாளருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பின்னணியில் இல்லை

தமிழ்நாட்டில் தற்போது கடினமான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. கவர்னர் அரசியல் அமைப்பு சட்டப்படி உரிய முடிவை அறிவிப்பார். இந்த பிரச்சினையில் பாரதீய ஜனதா பின்னணியில் உள்ளதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். புறவாசல் வழியாக பாரதீய ஜனதா நுழையாது. தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண சூழ்நிலையின் பின்னணியில் பாரதீய ஜனதா கட்சி இல்லை.

சசிகலா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளது. தீர்ப்பும் விரைவில் வெளிவர உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியையும், முதல்–அமைச்சர் பதவியையும் ஒருவரே ஏற்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தை மட்டும் கூறி சசிகலா முதல்–அமைச்சராக வேண்டும் என்று அவசரம் காட்டுவது சரியல்ல. அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்கள் கொந்தளிப்பான நிலையில் உள்ளனர்.

வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதா?

வாக்காளர்கள் சுதந்திரமாக ஓட்டுப்போட வேண்டும் என்ற உரிமை இருக்கும் போது, அவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ஓட்டலில் அடைத்து வைத்து இருப்பது மிரட்டி பணிய வைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும். ஏற்கனவே முதல்–அமைச்சர் பதவியில் இருந்து தன்னை ராஜினாமா செய்ய மிரட்டி கையெழுத்து பெற்றதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். அதுபோல் எம்.எல்.ஏ.க்கள் வி‌ஷயத்திலும் நடைபெறும். சசிகலாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

முன்னதாக வானதி சீனிவாசன் கூட்டத்தில் பேசும் போது, ‘கோவையில் தங்க நகை தொழிலை மேம்படுத்தவும், தங்க நகை தொழிலாளர்களின் நலனுக்காகவும் மத்திய அரசு சார்பில், நகைத்தொழிலுக்கான பூங்கா உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதில் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க செயலாளர் தேவராஜன், ஏ.கண்ணன், என்.பொன்மணி, சிவராஜ், யுவராஜ், சபரிகிரீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story