தபால் நிலையங்களில் செயல்பட்ட ரெயில்வே முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன
இந்திய ரெயில்வேயில் பயணிகளின் வசதிக்காக ரெயில்நிலையங்கள் இல்லாத இடங்களில் தபால் நிலையங்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது.
மதுரை,
இந்திய ரெயில்வேயில் பயணிகளின் வசதிக்காக ரெயில்நிலையங்கள் இல்லாத இடங்களில் தபால் நிலையங்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை தொடர்ந்து ஆன்லைனில் ரெயில்டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை அதிகரித்து வருகிறது.
தற்போது ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது, மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை, மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணச்சலுகை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து ரெயில்நிலைய முன்பதிவு மையங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.
இந்த நிலையில், ரெயில் டிக்கெட் முன்பதிவே செய்யாத தபால் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களை மூடுவதற்கு மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை கோட்டத்தில் மதுரை ரிசர்வ் லைன் தபால் நிலையம், நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் தபால் நிலையம், சிவகிரி துணைத்தபால் நிலையம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துணைத்தபால் நிலையம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் டவுன் தபால் நிலையம், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தபால் நிலையம் ஆகியவற்றில் செயல்பட்டு வந்த ரெயில்டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடப்பட்டுள்ளன.