ஓ.பன்னீர்செல்வம்–சசிகலா ஆதரவாளர்கள் போட்டி போராட்டம்
வாடிப்பட்டியில் ஓ.பன்னீர்செல்வம்–சசிகலா ஆதரவாளர்கள் போட்டி போட்டு உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நிலவி வரும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு நேற்று காலை அ.தி.மு.க. பேரூர் செயலாளர் பாப்புரெட்டி தலைமையில் 26 பேர் சசிகலாவை முதல்–அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் அழைப்பு விடுக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர்.
இதைக் கேள்விப்பட்டதும் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒன்றுதிரண்டு காளிதாஸ் தலைமையில் வார்டு செயலாளர் வீரபாகுதேவன் உள்பட 80 பேர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இருதரப்பினர்பின்னர் சசிகலா ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்த பந்தல் முன்பு வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்தனர்.
முன்அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்ட இருபிரிவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் கோஷங்கள் போட்டபடி கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு முடிவுக்கு வந்தது.