தமிழ்நாட்டிற்கு உடனடியாக புதிய கவர்னரை நியமிக்க வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி


தமிழ்நாட்டிற்கு உடனடியாக புதிய கவர்னரை நியமிக்க வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2017 4:15 AM IST (Updated: 13 Feb 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டிற்கு உடனடியாக புதிய கவர்னரை நியமிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் துறைமங்கலம் மூன்று வழிச்சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டை நேற்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்து நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கவர்னர்

ஜெயலலிதா மறைவு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து ஒருவாரம் ஆகிறது. புதிய சட்டமன்ற தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தமிழக கவர்னர் தான் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றாமல் உள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்காக குதிரை பேரம் என்று சொல்லும் வகையில் விலை பேசப்படுகிறது என்று பொதுமக்கள் வெளிப்படையாகவே விவாதித்து வருகின்றனர். இந்த அவலம் ஏற்படுவதற்கு கவர்னர் விரைந்து முடிவெடுக்காததே காரணம். இது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வழியை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு தற்போதைய தமிழக நெருக்கடி நிலைக்கு பொறுப்பு ஏற்று உடனடியாக தமிழ்நாட்டிற்கு புதிய கவர்னரை நியமிக்க வேண்டும்.

ஜனாதிபதி ஆட்சி

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. அரசு இன்னும் 4 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு ஆகும். ஆனால் அக்கட்சியை பலவீனப்படுத்துவதற்கு உட்கட்சி முரண்பாடுகளும், புறத்தில் இருந்து அழுத்தங்களும் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வருவதற்கு அல்லது விரைவில் சட்டமன்ற தேர்தலை மக்களிடம் திணிப்பதற்கு முயற்சி நடப்பதாக தோன்றுகிறது. கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டியது இருதரப்பினரும் எடுக்க வேண்டிய முடிவு ஆகும். ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக நிலையை மத்திய அரசு தங்களுக்கு சாதகமாக ஏற்படுத்திக்கொள்கின்ற முயற்சிகளை எடுக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கட்சியின் மாநில பொறுப்பாளர் கிட்டு, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

உள்ளாட்சி தேர்தல்

முன்னதாக பெரம்பலூர் மங்களமேட்டில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திருமாவளவன், நிருபர்களிடம் கூறுகையில், வருகிற மார்ச் 10-ந் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் அரசியல் பிரச்சினைகளால் குழம்பி போய் உள்ளனர். அரியலூர் மாவட்டம் செந்துறையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் வயிற்றில் சிசு உள்ளதாக மருத்துவ குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த வழக்கை இரட்டை கொலை வழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள புடையூரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை இதுவரை பிடித்து எந்தவித குற்றவியல் நடவடிக்கையும் எடுக்காமல் தாமதப் படுத்தி வருகின்றனர். அவர்களை உடனே பிடித்து வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலை காலநீட்டிப்பு செய்யாமல் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும், என்றார். 

Next Story