சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் சிக்கல்கள் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா?
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் உள்ள சிக்கல்களை களைய மாவட்ட நிர்வாகம் சிறப்பு நடவடிக்கை எடுக்குமா? என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நீர்நிலைகள், விவசாய நிலங்கள், தனியார் நிலங்கள், சாலையோரம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகிய பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் இருந்தால் அவற்றை முழுமையாக அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தேனி உள்பட பல மாவட்டங்களுக்கு சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சீமைக்கருவேல மரங்கள் மண்ணுக்கும், நிலத்தடி நீருக்கும் ஆபத்தானவை. மேலும் பொதுமக்கள், கால்நடைகள் மட்டுமின்றி சுற்றுச்சூழலையும் பாதிப்பு அடையச் செய்வன. எனவே இதனை அகற்ற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தேனி மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம், சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கு என்று தனி நிதி ஒதுக்கீடு இல்லை. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள நிதியை கொண்டு இந்த மரங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அழிக்கும் பணிகள்தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. 50–க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஆறுகள், ஓடைகள், வாய்க்கால்கள் என நீர்நிலைகள் பலவும் சீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் என்றால் பல கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள நிதியை குடிநீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்தி வருவதால், சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பதற்கு பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் பல ஊராட்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையை ஏற்று, சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
சிக்கல்கள்இந்த பணிகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. இன்னும் பல நீர்நிலைகள் சீமைக்கருவேல மரங்களின் பிடியில் இருந்து மீள முடியாமல் உள்ளன. வைகை ஆற்றை எடுத்துக் கொண்டால் பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. குறிப்பாக அம்மச்சியாபுரம் பகுதியில் ஆற்றுக்குள் சீமைக்கருவேல மரங்கள் காடு போன்று வளர்ந்து உள்ளன. முல்லைப்பெரியாறு, வரட்டாறு, கொட்டக்குடி ஆறு போன்ற ஆறுகளிலும் பல இடங்களில் இந்த மரங்கள் வளர்ந்து உள்ளன. பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட இந்த ஆறுகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
அதேபோன்று தான் கண்மாய்களின் நிலைமையும் உள்ளது. தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி, ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள், சாலையோரங்கள், கண்மாய்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் போன்றவைகளில் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து உள்ளன. இவை இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.
முழுமையற்ற நிலைதேனி–போடி சாலையோரம் பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. குச்சனூர் செல்லும் சாலையிலும், போடேந்திரபுரம், உப்புக்கோட்டை, கூழையனூர், பாலார்பட்டி உள்பட பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தாமரைக்குளம் கண்மாயில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இங்கும் முழுமையற்ற நிலையில் தான் அகற்றப்பட்டு உள்ளன. கண்மாய் கரைகளில் இன்னும் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் அருகிலும் இந்த மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன.
இதுபோல் மாவட்டத்தின் பல இடங்களில் இத்தகைய மரங்கள் அகற்றப்படாத நிலைமை நீடிக்கிறது. எனவே சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இதற்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
நடவடிக்கைசீமைக்கருவேல மரங்களை ஒழிக்க சிறப்பு நிதி ஒதுக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் நீண்டகாலமாக உள்ளது. சிறப்பு நிதி கேட்டு மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அத்துடன், மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் தன்னார்வலர் குழுக்கள் அமைத்து சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒன்றியம், நகரம், பேரூராட்சி என பகுதிகள் வாரியாக சிறப்பு தன்னார்வலர் குழுக்கள் அமைத்து, அந்த குழுக்கள் மூலமாக சீமைக்கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொண்டால் அரசு நிதியை எதிர்பாராமல் பல இடங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வாய்ப்புள்ளது.
எனவே சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.