தெருக்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்: வணிகர்களுக்கு கிரண்பெடி வேண்டுகோள்


தெருக்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்: வணிகர்களுக்கு கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 Feb 2017 3:15 AM IST (Updated: 13 Feb 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தெருக்களில் குப்பைகளை கொட்டுவதை வணிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

புதுவை முத்தியால்பேட்டை மணிக்கூண்டு மற்றும் மார்க்கெட் பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடை, பாஸ்ட் புட் கடைகளில் இருந்து கழிவுநீர் வாய்க்காலில் கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கவர்னருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த 5–ந் தேதி முத்தியால்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது கழிவுகள் கொட்டப்பட்டு வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததை பார்த்து கவர்னர் கிரண்பெடி அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அங்கு இருந்த கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்தநிலையில் நேற்று மாலை கவர்னர் மாளிகையில் வணிகர்கள், சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் கூட்டம் நடைபெற்றது.

குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்

கூட்டத்திற்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

வணிகர்கள் தங்கள் கடைகள் முன்பு குப்பைத் தொட்டிகளை வைத்து பராமரிக்க வேண்டும். தெருக்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்களில் குப்பைகளால் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் அதனை அகற்றுவதற்காக உள்ளாட்சி நிர்வாகம் வீணாக நிதியை செலவிடும் நிலையை தடுக்கலாம்.

மேலும் தனியார் நிறுவன ஏழை துப்புரவு தொழிலாளர்களுக்கு உடை, அவர்களது குழந்தைகளுக்கு கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுதல் போன்ற உதவிகள் செய்யலாம். வணிகர்கள் தங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள், குறைகளை தெரிவிக்க கட்செவி அஞ்சல் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கிரண்பெடி கூறினார்.

வணிகர்கள் கோரிக்கை

கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகர்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், டிரான்ஸ்போர்ட் நகர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தென்பெண்ணையாற்றில் இருந்து தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், பஸ் நிலையத்தை தூய்மையாக வைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும். கடைகளை மறைக்கும்படியான பேனர்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கைளை பரிசீலித்து தீர்வு காண்பதாக கவர்னர் உறுதி அளித்தார். மேலும் வணிகர்கள் கோரிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் கூறினார்.

கூட்டத்தில் கவர்னரின் சிறப்பு செயலாளர் தேவநீதிதாஸ் பேசும்போது, ‘‘தூய்மையான புதுச்சேரி திட்டத்துக்கு வணிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போது தான் புதுவைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகையின் மூலம் வருவாய் ஈட்ட முடியும்’’ என்றார். இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை, மின்துறை, நகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story