சின்ன வெங்காய விதைகள் 2 டன் ஏற்றுமதி: வறட்சியால் விலை கடும் வீழ்ச்சி


சின்ன வெங்காய விதைகள் 2 டன் ஏற்றுமதி: வறட்சியால் விலை கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 13 Feb 2017 3:30 AM IST (Updated: 13 Feb 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஆண்டு தோறும் 2 டன் சின்ன வெங்காய விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு வறட்சியால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஒட்டன்சத்திரம்

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான காய்கறி மார்க்கெட் எது? என்று கேட்டால் அனைவரும் ஒரே குரலில் ஒட்டன்சத்திரம் என்று சொல்லி விடுவோம். அந்த அளவுக்கு ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் புகழ் வாய்ந்தது. அங்கிருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மேலும் சின்னவெங்காயம் முதல் அனைத்து வகையான காய்கறிகளும் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இதுதவிர கண்வலி கிழங்கு, கண்வலி விதைகள் உற்பத்தியும் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் நடக்கிறது.

சின்ன வெங்காய விதை

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சின்ன வெங்காய விதை உற்பத்தியும் வெகுவாக நடைபெற்று வருகிறது. பொதுவாக சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் வெங்காயத்தை வாங்கி நடவு செய்து சாகுபடி செய்வார்கள். இதன் மூலம் ஏக்கருக்கு 5 டன் வரை மகசூல் கிடைக்கும்.

அதேநேரம் ஒட்டு ரக விதைகள் மூலம் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தால் அதிகபட்சமாக 8 டன் மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதன் விளைவாக விதைகள் மூலம் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இது சின்ன வெங்காய விதை உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

விதைகள் உற்பத்தி

சின்ன வெங்காய விதையை பொறுத்தவரை ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி செய்யப்படுகிறது. சின்ன வெங்காய செடிகள் பூக்களில் இருந்து விதைகள் எடுக்கப்படுகின்றன. இந்த விதைகளை பதப்படுத்தி 500 கிராம், 1 கிலோ அளவுகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

இது குறித்து ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த அய்யப்பன்பொன்ராஜ் கூறியதாவது:–

சின்ன வெங்காய விதை உற்பத்தியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சின்ன வெங்காய விதையை நடவு செய்து அதில் இருந்து நாற்றுகளை எடுத்து, வயலில் நடவு செய்வோம். செடிகள் வளர்ந்ததும் 4 மாதத்தில் பூக்க தொடங்கும். இதையடுத்து பூக்களில் விதைகள் பிடித்ததும் 5 மாதத்தில் அறுவடை செய்வோம்.

விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரத்தில் இருந்து தேனி, மதுரை, சேலம், கோவை, நெல்லை உள்பட பல மாவட்டங்களுக்கு விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் ஆந்திரா மாநிலத்திற்கும், இலங்கைக்கும் சின்ன வெங்காய விதைகள் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது பெரும்பாலான விவசாயிகள் விதை மூலமாகவே சின்ன வெங்காயம் சாகுபடி செய்கின்றனர்.

இதனால் விவசாயிகள் மத்தியில் சின்ன வெங்காய விதைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 டன்னுக்கு குறையாமல் சின்ன வெங்காய விதை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ சின்ன வெங்காய விதை ரூ.3 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுவதால் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.1,000 மட்டுமே விற்பனை ஆகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story