சட்டசபையை கவர்னர் விரைவில் கூட்ட வேண்டும் தஞ்சையில் கி.வீரமணி பேட்டி


சட்டசபையை கவர்னர் விரைவில் கூட்ட வேண்டும் தஞ்சையில் கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2017 4:30 AM IST (Updated: 13 Feb 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபையை கவர்னர் விரைவில் கூட்ட வேண்டும் என்று தஞ்சையில் கி.வீரமணி கூறினார். பேட்டி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழக கவர்னர் சட்டசபையை கூட்டுவதற்கு எவ்வளவு விரைவில் அறிவிக

தஞ்சாவூர்,

சட்டசபையை கவர்னர் விரைவில் கூட்ட வேண்டும் என்று தஞ்சையில் கி.வீரமணி கூறினார்.

பேட்டி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக கவர்னர் சட்டசபையை கூட்டுவதற்கு எவ்வளவு விரைவில் அறிவிக்கிறாரோ, அவ்வளவு விரைவில் அவர்கள் வந்து சந்திக்க வேண்டிய கடமை தானாகவே வந்துவிடும். அவர்களை பொருத்தவரை தொலைக்காட்சியிலேயே பலர், நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் என சொல்கின்றனர். அங்கே கூட்டம் நடத்துகின்றனர். வெளியே வந்து பேசுகின்றனர். எனவே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? என்பது பற்றி அவர்களே தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதை முழுமையாக தெளிவுபடுத்தப்பட வேண்டுமானால் அந்த பொறுப்பு முழுக்க கவர்னர் கையில் தான் இருக்கிறது என்பது எங்களை போன்றவர்களின் கருத்து. சட்டசபையில் பெரும்பான்மையாக இருப்பவர்களையோ அல்லது மற்றவரையோ, யாரை அவர் அழைக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அவர்களை உடனடியாக அழைத்து, தாமதப்படுத்தாமல் வாய்ப்பை கொடுத்தால் சட்டசபை உறுப்பினர்கள் சட்டசபைக்கு வர வேண்டிய இயல்பான நிலை தானாகவே வந்துவிடும். அப்போது அடைத்து வைத்திருக்கின்றனரா? இல்லையா? என்ற பிரச்சினை இருக்காது.

மத்தியஅரசு

தமிழ்நாட்டில் இவ்வளவு அசிங்கம் நடக்கக்கூடாது. இவ்வளவு நாள் வடநாட்டில் தான் நிகழ்ந்தது. தமிழ்நாட்டு அரசியலில் இந்த அசிங்கங்கள் அரங்கேற்றப்படக்கூடாது. இதற்கு டெல்லியின்(மத்தியஅரசு) போக்கு தான் முழு காரணம். அவர்களை பொருத்தவரை அ.தி.மு.க.வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களை டெல்லிக்கு சாதகமாக உருவாக்க வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஒரு வேளை தங்களுக்கு போதிய ஆதரவு கிடைக்கக்கூடிய சூழ்நிலை இல்லை என்ற காரணத்தினால் எவ்வளவு விரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களை இழுக்க வேண்டுமோ அவ்வளவு விரைவில் இழுக்க வேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளது. அந்த கட்டளை நிறைவேற்றப்பட்டு வருகிறது. சட்டசபையை பற்றி அவர்களுக்கு(மத்தியஅரசு) அதிகம் கவலையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கம்

முன்னதாக தேசிய புதிய கல்வி கொள்கை, நீட் நுழைவுத்தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் தஞ்சையில் நடந்தது. கருத்தரங்கிற்கு திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் அழகிரிசாமி, மாநில துணைத் தலைவர் இளங்கோவன், மாவட்ட தலைவர் காமராசு, மாவட்ட துணைத் தலைவர் வீரமணி, மாவட்ட அமைப்பாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பழனிவேல் வரவேற்றார். கருத்தரங்கை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

புதிய கல்வி கொள்கை ஒரு குலக்கல்வி திட்டமே என்ற தலைப்பில் பேராசிரியர் எழிலரசனும், புதிய கல்வி கொள்கை ஒரு சமஸ்கிருத திணிப்பே என்ற தலைப்பில் பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் ரமேசும், ஆசிரியர் பணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புதிய கல்வி கொள்கை என்ற தலைப்பில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் எழிலரசனும், மாணவர்களின் இடைநிற்றலை உருவாக்கும் புதிய கல்வி கொள்கை என்ற தலைப்பில் பொறியாளர் ராமசாமியும், சமூக நீதியை ஒழிக்கும் சூழ்ச்சியே நீட் நுழைவுத்தேர்வு என்ற தலைப்பில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர் அஜிதனும் பேசினர்.

இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். கருத்தரங்கில் பகுத்தறிவாளர் கழக மாநகர தலைவர் இளவரசி, மாவட்ட அமைப்பாளர் அழகிரி, மாநகர செயலாளர் இலக்குமணசாமி, திராவிடர் கழக பொதுச் செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் ராஜு நன்றி கூறினார்.


Next Story