அடிப்படை வசதி இல்லாத திருத்தங்கல் ரெயில் நிலையம்


அடிப்படை வசதி இல்லாத திருத்தங்கல் ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 13 Feb 2017 4:00 AM IST (Updated: 13 Feb 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் நடைமேடை பகுதிகள் மது அருந்தும் கூடமாக பயன்படுத்தப்படுகிறது.

ரெயில் நிலையம்

தொழில் நகரமான திருத்தங்கலில் உள்ள ரெயில் நிலையத்துக்கு சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், மற்றும் மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ஆகிய 2 ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரெயில் நிலையத்தை மேம்படுத்திட தொழில் அதிபர்கள் தாமாக முன்வந்து பல உதவிகளை செய்துள்ளனர். அந்த வகையில் கணேசன் என்பவர் பல லட்ச ரூபாய் செலவு செய்து நடைமேடை அமைத்து தரம் உயர்த்த துணை நின்றார்.

ஆனால் ரெயில்வே நிர்வாகம் இதனை சரியான முறையில் பயன்படுத்தாமல் ரெயில் நிலையம் பாழ்பட்டு வருகிறது. பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கை வசதியில்லை. மேற்கூரை வசதியில்லாமல் வெயிலில் நின்று ரெயில் ஏற வேண்டிய நிலை உள்ளது.

மது அருந்தும் கூடம்

இந்த மார்க்கத்தில் இரவில் செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ற பிறகு வேறு ரெயில் ஏதும் வருவதில்லை. அதன்பின்னர் வெறிச்சோடிக்கிடக்கும் நடைமேடையில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து குடிமகன்கள் மரு அருந்துகின்றனர். திறந்த வெளி மது அருந்தும் கூடமாக ரெயில் நிலையம் உள்ளது. காலையில் ரெயில் ஏற வரும் பயணிகள் அங்கு கிடக்கும் காலி மதுபாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களைக் கண்டு முகம் சுளிக்கும் நிலை உள்ளது. போலீசார் எந்த வித கண்காணிப்பு நடவடிக்கையிலும் இறங்காததால் சர்வசாதாரணமாக இரவில் இங்கு சமூக விரோத கும்பல் நடமாடுவதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி ரெயில்நிலையத்தின் பல இடங்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது.

பயணிகளுக்காக கட்டப்பட்ட சுகாதாரவளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடக்கும் நிலையில் பயணிகள் பெரும் சிரமப்படுகின்றனர். இதனால் சிலர் ரெயில் நிலைய பகுதியினை அசுத்தம் செய்கின்றனர். ரெயில் வரும் நேரங்களில் இதனை திறக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் வசதியும் செய்து தரப்படவில்லை.

கூடுதல் கட்டணம்

ரெயில் நிலைய பகுதியில் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய மேற்கூரை வசதியில்லாததால் வாகனங்கள் வெயிலில் காய வேண்டியதுள்ளது. மேலும் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுவதாகவும் பாதுகாப்பான சூழல் இல்லை என்றும் புகார் கூறப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

ரெயில் நிலைய பகுதியில் மாடுகளும், ஆடுகளும் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன. இதனை தடுக்க கேட் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வர்த்தக பிரமுகர்கள் நிறைந்துள்ள பகுதியில் உள்ள இந்த ரெயில் நிலையத்தை செம்மைப்படுத்த உதவிக்கரம் நீட்ட அவர்கள் தயாராக இருந்தும் ரெயில்வே நிர்வாகம் அதனை பயன்படுத்த தவறி விட்டதாக கூறப்படுகிறது.

Next Story