மறவபட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த முரட்டுக்காளைகள் 30 பேர் காயம்


மறவபட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த முரட்டுக்காளைகள் 30 பேர் காயம்
x
தினத்தந்தி 13 Feb 2017 4:00 AM IST (Updated: 13 Feb 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் மறவபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் முரட்டுக்காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இவற்றை அடக்க முயன்ற 18 வீரர்கள் உள்பட 30 பேர் காயமடைந்தனர். தேர் திருவிழா திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவை அடுத்த மறவபட்டியில் புனித அந்தோணியார் கோவில் தே

தேர் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவை அடுத்த மறவபட்டியில் புனித அந்தோணியார் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக நவநாள் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் புனித பெரிய அந்தோணியார் உள்ளிட்ட புனிதர்களின் திருஉருவங்கள் தாங்கிய மின்ரதங்களின் ஊர்வலம் மற்றும் வாணவேடிக்கை போன்றவை நடைபெற்றன. இதில் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து நேற்று காலை பரிசுப்பொருள் அழைப்பு நடைபெற்றது.

பின்னர் 9.30 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. திண்டுக்கல் சப்–கலெக்டர் ஆகாஷ் கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனைத் தொடர்ந்து அறிவிப்பாளர் அறிவிக்க ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து 274 வீரர்களை வாடிவாசல் பகுதிக்கு செல்ல அனுமதி அளித்தனர்.

வீரர்களை பந்தாடிய காளைகள்

அலங்காநல்லூர், பாலமேடு, திருச்சி, விராலிமலை, மணப்பாறை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 155 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த முரட்டுக்காளைகளை, வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். சில காளைகள் யாருடைய பிடிக்கும் சிக்காமல் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போன்று பாய்ந்து சென்றன. ஜல்லிக்கட்டு காளைகள் மீது வண்ணப்பொடிகள் வீசப்பட்டிருந்ததால், வாடிவாசலில் இருந்து வெளியே வந்தபோது வண்ணப்பொடிகள் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் அவற்றை பிடிக்க வீரர்கள் திண்டாடினர்.

சில காளைகள் தங்களைப்பிடிக்க முயன்ற வீரர்களை கொம்புகளால் தூக்கி வீசி பந்தாடின. இதுபோன்றே சில காளைகள் மைதானத்திற்குள் வந்ததும் நிதானமாக நின்று சுற்றும் முற்றும் பார்த்தபடி கொம்புகளை ஆட்டி மாடுபிடி வீரர்களை மிரட்டின. இதனை பார்த்த பார்வையாளர்கள், நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் ஜல்லிக்கட்டுனா! ஜல்லிக்கட்டு!! மறவபட்டி ஜல்லிக்கட்டு!!! என உற்சாக குரல் எழுப்பினர். இவ்வாறு உற்சாகத்துடனும், ஒருவித பரபரப்புடனும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

30 பேர் காயம்

இதில் காளைகள் முட்டியதில் 18 வீரர்கள் உள்பட 30 பேர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த காப்பிளியபட்டியை சேர்ந்த பகவதிராஜ் மற்றும் மைலாப்பூரை சேர்ந்த அந்தோணி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வெள்ளிக்காசுகள், இரும்பு பீரோ, சில்வர் அண்டா, பானை, குடம், பித்தளை குத்துவிளக்குகள், பிளாஸ்டிக் சேர், செல்போன், கட்டில்கள் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.

இந்த விழாவில் தாடிக்கொம்பு சண்முகவேல் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கந்தசாமிக்கவுண்டர், திண்டுக்கல் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயசீலன், அகரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் அகரம் சக்திவேல், தாடிக்கொம்பு பேரூர் கழக அ.தி.மு.க. செயலாளர் முத்துராஜ், தாடிக்கொம்பு கூட்டுறவு கடன் சங்க தலைவர் முத்தையா, தாடிக்கொம்பு பேரூர் கழக தி.மு.க. செயலாளர் நாகப்பன், அகரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் அம்மாவாசி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர். விழா ஏற்பாடுகளை மறவபட்டி ஊர் பெரியதனக்காரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

துளிகள்

* ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் நிச்சய பரிசு உள்பட ஒன்றுக்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

* அவ்வப்போது மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

* பெரும்பான்மையான மாடுகளுக்கு வெள்ளிக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

* சில காளைகளின் உரிமையாளர்கள் பெயரை நிகழ்ச்சி அறிவிப்பாளர் அறிவித்தவுடன், மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று பதுங்கினர்.

* ஏராளமான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.


Next Story