விருகம்பாக்கத்தில் பூட்டி கிடக்கும் வீடுகளில் திருடிய வாலிபர் கைது
விருகம்பாக்கத்தில் பூட்டி கிடக்கும் வீடுகளில் திருடிய வாலிபர் கைது 25 பவுன் நகைகள் பறிமுதல்
பூந்தமல்லி
விருகம்பாக்கத்தில் பகல் நேரத்தில் பூட்டி கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பூட்டி கிடக்கும் வீடுகளில் திருட்டுசென்னை விருகம்பாக்கம் பகுதியில் பகல் நேரத்தில் பூட்டி கிடக்கும் வீடுகளை குறி வைத்து, அந்த வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் விருகம்பாக்கம் போலீசார் தனிப்படைகள் அமைத்து கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தை வைத்தும் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
வாலிபரிடம் விசாரணைஇந்த நிலையில் விருகம்பாக்கம் பகுதியில் சப்–இன்ஸ்பெக்டர் முரளி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக நடந்து சென்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார். மேலும் அவரது உருவம், விருகம்பாக்கத்தில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தோடு ஒத்துப்போனது.
அவரது கையில் இருந்த பையை சோதனை செய்த போது அதில், பூட்டை உடைக்க தேவையான பொருட்களை வைத்து இருந்தார். இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.
கைதுஅதில் பிடிபட்ட அந்த வாலிபர், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பூபதி ராஜா(வயது 32) என்பதும், பகல் நேரங்களில் வீட்டை பூட்டி விட்டு வேலை, பள்ளி மற்றும் கடைகளுக்கு செல்பவர்களின் வீடுகளை குறி வைத்து, அந்த வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பதும் தெரிந்தது.
இவ்வாறு அவர், விருகம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் பூட்டி கிடந்த வீடுகளை நோட்டமிட்டு, அந்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து பூபதி ராஜாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 25 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணம் மற்றும் டி.வி. உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பூபதி ராஜா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.