நசரத்பேட்டை அருகே மொபட்–வேன் மோதல் 10–ம் வகுப்பு மாணவர் பலி


நசரத்பேட்டை அருகே மொபட்–வேன் மோதல் 10–ம் வகுப்பு மாணவர் பலி
x
தினத்தந்தி 13 Feb 2017 3:15 AM IST (Updated: 13 Feb 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

நசரத்பேட்டை அருகே மொபட்–வேன் மோதல் 10–ம் வகுப்பு மாணவர் பலி என்ஜினீயரிங் மாணவி காயம்

பூந்தமல்லி

நசரத்பேட்டை அருகே மொபட் மீது வேன் மோதியதில் 10–ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது உறவினரான என்ஜினீயரிங் கல்லூரி மாணவி காயம் அடைந்தார்.

10–ம் வகுப்பு மாணவர்

போரூர் அடுத்த முகலிவாக்கம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் பிரவீன் ரிச்சர்ட்சன்(வயது 15). இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய உறவினர் மகள் பியூலா(20). இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

பூந்தமல்லியை அடுத்த வெள்ளவேட்டில் உள்ள இவர்களது உறவினர் இல்ல விஷேசத்துக்காக நேற்று மாலை இருவரும் மொபட்டில் சென்று கொண்டு இருந்தனர். மொபட்டை பியூலா ஓட்டினார். பின்னால் பிரவீன் ரிச்சர்ட்சன் அமர்ந்து இருந்தார்.

வேன் மோதி பலி

பூந்தமல்லி–பெங்களூரு நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த வேன் ஒன்று இவர்களது மொபட் மீது மோதியது. இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பிரவீன் ரிச்சர்ட்சனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவர் பிரவீன் ரிச்சர்ட்சன் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த பியூலா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

டிரைவர் கைது

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான பிரவீன் ரிச்சர்ட்சன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் பழனிச்சாமி (35) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story