நாமக்கல் பகுதியில் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணியை கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு


நாமக்கல் பகுதியில் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணியை கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
x
தினத்தந்தி 13 Feb 2017 4:30 AM IST (Updated: 13 Feb 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் பகுதியில் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணியை கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

கணக்கெடுப்பு பணி


நாமக்கல் மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு குறித்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் நிவாரண கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு, ஆவணங்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை முன்னிட்டு இக்கணக்கெடுப்பு விவரங்களை கொண்டு வருவாய்த்துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, சரியான விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.

நாமக்கல், பெரியூர், தும்மங்குறிச்சி, மேலப்பட்டி மேல்முகம், எர்ணாபுரம், சிலுவம்பட்டி, காதப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வரும் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு சரிபார்ப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் மேலாய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு


இதையொட்டி தும்மங்குறிச்சி பகுதியில் உள்ள செல்லம்மாள், செல்வராஜ், சக்திவேல் ஆகியோரின் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களையும், மேலப்பட்டி மேல்முகம் பகுதியில் கலாராணி என்பவரது வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களையும், எர்ணாபுரம் சிலுவம்பட்டியை சேர்ந்த சிவபாலன் என்பவரது வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களையும் வருவாய்த்துறையினர் சரியாக கணக்கெடுத்து உள்ளார்களா? என கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, நாமக்கல் உதவி கலெக்டர் ராஜசேகரன், நாமக்கல் தாசில்தார் சுகுமார் உள்பட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story