தம்மம்பட்டி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் 20 மாடுபிடி வீரர்கள் காயம்


தம்மம்பட்டி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் 20 மாடுபிடி வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 13 Feb 2017 4:30 AM IST (Updated: 13 Feb 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

தம்மம்பட்டி அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தது. இதில் மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.

தம்மம்பட்டி,

ஜல்லிக்கட்டு


சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்துள்ள கொண்டையம்பள்ளி கிராமத்தில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டு தடையை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்தநிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை தமிழக அரசு நீக்கியதால் தம்மம்பட்டி அருகே உள்ள கொண்டையம்பள்ளியில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கொண்டையம்பள்ளியில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக சுப்ரமணியர் கோவில் தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணி வரை நடந்தது. இதில் சென்னை, மதுரை அலங்காநல்லூர், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, உலிபுரம், நாகியம்பட்டி, கூடமலை, வீரகனூர், பெரம்பலுர், உள்ளிட்ட 60–க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து 400 காளைகள் கொண்டு வரப்பட்டன.

20 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 100–க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். மேலும் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பணம் மற்றும் வெள்ளிக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு விழாக்குழுவினர் தங்கமோதிரம், தங்ககாசுகள், வெள்ளிகாசுகள், வெள்ளி பாத்திரம், குத்துவிளக்கு உள்ளிட்ட பல பொருட்களை வழங்கினர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 20 மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த ஜல்லிக்கட்டை திரளானவர்கள் கண்டுகளித்தனர். பார்வையாளர்களுக்கு வசதியாக அங்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டையொட்டி கொண்டையம்பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

எருதாட்டம்


மகுடஞ்சாவடி கூடலூர் கிராமத்தில் உள்ள முத்து முனியப்பன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவராயன்பாளையம், குன்னிபாளையம், மேட்டுவளவு, ஆண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து 30–க்கும் மேற்பட்ட மாடுகள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன.

இதையடுத்து மாட்டின் கழுத்தில் கயிற்றை கட்டி கொண்டு இருபுறமும் வாலிபர்கள் பிடித்து கொண்டு வேகமாக ஓடவிட்டனர். அப்போது சிலர் மாட்டின் முன்பகுதிக்கு சென்று பொம்மை ஒன்றை காட்டி அதை மிரள வைத்தனர். இதில் சில மாடுகள் அந்த பொம்மை மீது முட்டியது. இந்த எருதாட்ட நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.


Next Story