டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு பணம் பறிக்க வந்த கும்பல் வெறிச்செயல்


டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு பணம் பறிக்க வந்த கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 13 Feb 2017 3:03 AM IST (Updated: 13 Feb 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே பணம் பறிக்க வந்த கும்பல் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டி வெறிச்செயலில் ஈடுபட்டது.

கும்பகோணம்,

பணம் பறிக்க முயற்சி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அசூா் பைபாஸ் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு புளியம்பேட்டை பகுதியை சோ்ந்த சண்முகம் (வயது40) என்பவர் மேற்பாா்வையாளராக பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 10 மணி அளவில் சண்முகம் மதுபான கடையை பூட்டிவிட்டு, தனது உறவினர் இன்னம்பூரை சோ்ந்த அன்பரசன்(38) என்பவருடன் வெளியே வந்து கொண்டிருந்தார். அவரிடம் மதுபானம் விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது.

அப்போது அங்கு வந்த கும்பகோணம் மீன் மாா்கெட் பகுதியை சோ்ந்த சேட் மற்றும் சிலா், அவரிடம் மதுபானம் கேட்டனர். அவர்களிடம் கடை மூடப்பட்டு விட்டதால் மதுபானம் தர முடியாது என சண்முகம் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து சேட் மற்றும் அவருடன் வந்த கும்பல் சண்முகத்திடம் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை பறிக்க முயன்றனர். இதை அன்பரசன் தடுத்தார்.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் சண்முகம், அன்பரசன் ஆகியோரை சேட் அரிவாளால் வெட்டினார். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பணம் பறிக்க முயன்ற கும்பலை பிடிக்க முயன்றனர். ஆட்கள் வருவதை அறிந்த சேட் மற்றும் அவருடன் வந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றது.

அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த சண்முகம், அன்பரசன் ஆகிய இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சண்முகம் கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story