பர்கூரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பிரமாண்ட எருது விடும் திருவிழா


பர்கூரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பிரமாண்ட எருது விடும் திருவிழா
x
தினத்தந்தி 13 Feb 2017 4:30 AM IST (Updated: 13 Feb 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

பர்கூரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பிரமாண்ட எருது விடும் விழாவில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பர்கூர்,

எருது விடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஜவுளி வியாபாரிகள், பொதுமக்கள் சார்பில் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து எருது விடும் விழா நடத்தப்படுவது வழக்கம். அதே போல 3 வருடங்களுக்கு ஒரு முறை கைப்பந்து போட்டி நடத்தப்பது வழக்கம். ஆனால் கடந்த 2008-ம் ஆண்டு முதல் எருது விடும் விழா நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் விழாவிற்கு இருந்த தடையை தமிழக அரசு நீக்கி அவசர சட்டம் பிறப்பித்தது. இதையடுத்து பர்கூரில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இதற்காக ரொக்கப்பரிசுசுகள் அறிவிக்கப்பட்டது. எருதுகள் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதை கணக்கிட்டு அதற்கேற்ப அதன் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசுகள் வழங்கப்பட்டன

இதையடுத்து பர்கூரில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் எருது விடும் விழா நடந்தது. இதற்காக கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். இந்த விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதனால் பர்கூர் நகரில் எங்கும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. மதியம் ஒரு மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 5 மணி அளவில் நிறைவடைந்தது. இதில் 70 காளைகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் பரிசுகளை வழங்கினார்கள்.

அதன்படி வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த சுகந்தி என்பவருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 111-ம், 2-ம் பரிசாக வெள்ளக்குட்டையைச் சேர்ந்த இந்துமதி என்பவருக்கு ரூ.88 ஆயிரத்து 888-ம், 3-ம் பரிசாக சுண்ணாம்புகுட்டையைச் சேர்ந்த சம்ரிதா என்பவருக்கு ரூ.66 ஆயிரத்து 666-ம், 4-ம் பரிசாக புதுப்பேட்டை அன்பழகனுக்கு ரூ.55 ஆயிரத்து 555-ம், 5-வது பரிசாக திருப்பத்தூர் சுந்தருக்கு ரூ.44 ஆயிரத்து 444-ம், 6-வது பரிசாக குரிசிலாப்பட்டுவைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கு ரூ.33 ஆயிரத்து 333-ம், 7-வது பரிசாக அந்தியூரைச் சேர்ந்த சஞ்சய்காந்திக்கு ரூ.22 ஆயிரத்து 222-ம், 8-வது பரிசாக பள்ளிகொண்டாவை சேர்ந்த சதீஷ்குமாருக்கு 11 ஆயிரத்து 111-ம், 9-வது பரிசாக குருவிநாயனப்பள்ளியைச் சேர்ந்த ரவி என்பவருக்கு 9 ஆயிரத்து 999-ம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மொத்தம் 21 பரிசுகள் வழங்கப்பட்டன.

ராயக்கோட்டை

இதே போல் ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பரை ஊராட்சி பால்னாம்பட்டியில் எருது விடும் விழா நேற்று நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் விடப்பட்டன. இதை பார்ப்பதற்காக ராயக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.


Next Story