கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தமிழ் அமைப்பினர் ஊர்தி பயணம் போலீசார் தடை விதித்ததால் பரபரப்பு


கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தமிழ் அமைப்பினர் ஊர்தி பயணம் போலீசார் தடை விதித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Feb 2017 4:15 AM IST (Updated: 13 Feb 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தமிழ் அமைப்பினர் ஊர்தி பயணம் தொடங்கினர். இந்த பயணத்துக்கு போலீசார் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

ஊர்தி பயணம்

தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வி வேண்டும், கோவில்களில் தமிழ் வழிபாடு, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், பெயர் பலகைகளில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை தரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பன்னாட்டு தமிழுறவு மன்றம் சார்பில் கடந்த 24 ஆண்டுகளாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி பரப்புரை ஊர்தி பயணம் (ரத யாத்திரை) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 25–வது ஆண்டு தமிழ் பரப்புரை ஊர்தி பயணம் நேற்று தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று காலை திரண்டனர்.

 இந்த தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் உரிய அனுமதி பெறாததால் ஊர்தி பயணம் நடத்தக்கூடாது என தடை விதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாரிடம் தமிழ் அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அனுமதி வழங்கினர்

அதன்பிறகு அவர்கள் போலீசாரின் சமரசத்தை ஏற்று அனுமதி கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து ஊர்தி பயணத்துக்கு போலீசார் அனுமதி வழங்கினர். தொடர்ந்து ஊர்தி பயணம் தொடங்கியது.

 இந்த நிகழ்ச்சிக்கு முத்துகருப்பன் தலைமை தாங்கினார். அருட்பணியாளர் வின்சென்ட், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீபா அய்யப்பன் வரவேற்று பேசினார். பன்னாட்டு தமிழ் உறவு மன்ற உலக அமைப்பாளர் சேதுராமன் ஊர்தி பயணத்தை தொடங்கி வைத்தார். இதில் ஓவியர் கோபாலகிருஷ்ணன், ராமசாமி, பொன்.மகாதேவன், பச்சைமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   

இந்த ஊர்தி பயணம் தூத்துக்குடி, ராஜபாளையம், மதுரை, கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரி வழியாக வருகிற 21–ந்தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது.


Next Story