நல்லெண்ண பயணமாக சென்னைக்கு வங்காளதேச ரோந்து கப்பல் நாளை வருகை
நல்லெண்ண பயணமாக வங்காளதேச கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ரோந்து கப்பல், சென்னை துறைமுகத்துக்கு நாளை வருகிறது.
வங்காளதேச கடலோர காவல் படைக்கு சொந்தமான பி.சி.ஜி.எஸ். தாஜ்தீன் பி.எல்.72 என்ற ரோந்து கப்பல் கடந்த மாதம் 12–ந் தேதியில் இருந்து கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ரோந்து கப்பல் நல்லெண்ண பயணமாக சென்னை துறைமுகத்துக்கு நாளை (செவ்வாய்கிழமை) பகல் 1 மணிக்கு வருகிறது.
இந்திய கடலோர காவல் படையின் கீழ் செயல்படும் தென்பிராந்திய கடலோர பாதுகாப்பு படை ஐ.ஜி., ராஜன் பர்க்கோத்ரா தலைமையில் அதிகாரிகள், வங்காளதேச கப்பலில் வரும் அதிகாரிகளுக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். இந்த கப்பலில் வரும் வங்காளதேச கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் 17–ந் தேதி வரை சென்னையில் தங்கியிருந்து, இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து செயலாற்றும் வகையிலான கலந்துரையாடல்கள், பல்வேறு பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளனர். இதில் இரு நாட்டு கடலோர காவல் படையினரும் ஈடுபடுகின்றனர்.
கைப்பந்து போட்டிகடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், தொலை ஆபரேட்டிங் நிலையம் உள்ளிட்டவற்றை 15–ந் தேதி சென்று பார்வையிட உள்ளனர். தொடர்ந்து 2 நாட்டு கடலோர பாதுகாப்பு படையினரின் நட்பு ரீதியிலான கைப்பந்து போட்டி 16–ந் தேதி நடக்கிறது.
பின்னர் தென்பிராந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ரோந்து கப்பலான சமுத்திர பேகார்தார் கப்பலில் சென்று பயிற்சி பெறுகின்றனர். ஒரு மணி நேரத்தில் 25 கடல் மைல் தூரத்தை இந்த கப்பல் கடக்கும் சக்தி கொண்டது.
இத்தகவலை இந்திய கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.