ரூ.100 கோடி செலவில் ‘பக்சிம வாகினி’ குடிநீர் திட்ட பணிகள்


ரூ.100 கோடி செலவில் ‘பக்சிம வாகினி’ குடிநீர் திட்ட பணிகள்
x
தினத்தந்தி 13 Feb 2017 4:32 AM IST (Updated: 13 Feb 2017 4:32 AM IST)
t-max-icont-min-icon

கடலோர மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.100 கோடி செலவில் ‘பக்சிம வாகினி‘ குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

மங்களூரு

கடலோர மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.100 கோடி செலவில் ‘பக்சிம வாகினி‘ குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகிறது என்று மந்திரி யு.டி.காதர் கூறியுள்ளார்.

மந்திரி யு.டி.காதர் பேட்டி

கர்நாடக மாநில உணவு மற்றும் பொது வினியோக துறை மந்திரியும், சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான யு.டி.காதர் நேற்று முன்தினம் மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடகத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள 139 தாலுகாக்களை அரசு ஏற்கனவே வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து விட்டது. இதில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பண்ட்வால், மங்களூரு தாலுகாக்களும் அடங்கும்.

இந்த பகுதிகளில் வறட்சி பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வறட்சி பணிகளை மேற்பார்வையிட வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு உதவியாக தாசில்தாரும், வருவாய் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

இந்த குழுவினர் வறட்சி பாதித்த மங்களூரு, பண்ட்வால் தாலுகாக்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று வறட்சி குறித்து ஆய்வு நடத்தி அதன்பின் அறிக்கையை மாநில அரசிடம் வழங்குவார்கள். மேலும் கிராமங்களில் உள்ள குளங்களில் இருப்புள்ள நீரின் நிலை, குடிநீர் பிரச்சினையை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து அறிக்கை தயார் செய்து அரசிடம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு எத்தினஒலே திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. அதுபோல் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ‘பக்சிம வாகினி’ என்ற குடிநீர் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டத்திற்காக ரூ.100 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளளது. இந்த திட்டத்திற்கான பணிகளும் தற்போது நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story