இரும்பு மேம்பாலம் திட்டத்தில் சித்தராமையா ரூ.65 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார் எடியூரப்பா குற்றச்சாட்டு
இரும்பு மேம்பாலம் திட்டத்தில் சித்தராமையா ரூ.65 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார் என்று எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு
இரும்பு மேம்பாலம் திட்டத்தில் சித்தராமையா ரூ.65 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார் என்று எடியூரப்பா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
குறிப்பேட்டில் தகவல்கள்முதல்–மந்திரி சித்தராமையா தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள ரூ.1,000 கோடியை காங்கிரஸ் மேலிடத்திற்கு கொடுத்துள்ளார் என்று நான் ஏற்கனவே கூறினேன். இது உண்மை தான். அவர் தன்னிடம் நெருக்கமாக உள்ள மேல்–சபை உறுப்பினர் கோவிந்தராஜ் மூலம் இந்த பணத்தை அனுப்பியுள்ளார்.
வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடைய வீட்டில் நடத்திய சோதனையில் கோவிந்தராஜின் குறிப்பேட்டில்(டைரி) தகவல்கள் இடம் பெற்றுள்ளன. எந்த நாளில் யாருக்கு, எவ்வளவு பணம் அவர் கொடுத்துள்ளார் என்பது பற்றிய விவரங்கள் அதில் இருக்கின்றன. இது சித்தராமையாவுக்கு தெரியாதா?. இதை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா கூறினார்.
பிரச்சினை கிளப்புவோம்இதுகுறித்து எங்கள் கட்சி நாளை(இன்று) நடக்கும் சட்டமன்ற கூட்டத்தில் பிரச்சினை கிளப்பும். ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்குமாறு எங்கள் கட்சியினர் வலியுறுத்துவார்கள். இதற்கு சித்தராமையா உரிய பதிலை அங்கேயே வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் தனது முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
சித்தராமையா காங்கிரஸ் மேலிடத்திற்கு ரூ.1,000 கோடி அனுப்பியது குறித்து சில நேர்மையான அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரே கூறினர். வரும் நாட்களில் சித்தராமையா அரசின் ஊழல்களை ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்துவேன். பெங்களூருவில் இரும்பு மேம்பாலம் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
ரூ.65 கோடி லஞ்சம்இந்த திட்டத்தில் ரூ.150 கோடி பேரம் பேசி அதில் முதல் தவணையாக ரூ.65 கோடியை லஞ்சமாக சித்தராமையா பெற்றுள்ளார். இதில் மந்திரிசபையில் உள்ள ஒரு முக்கியமான மந்திரி தனக்கு வேண்டியவருக்கு ஒப்பந்தத்தை கொடுக்க திட்டம் தீட்டி வருகிறார். பாரபட்சமற்ற, ஊழல் இல்லாத ஆட்சி நிர்வாகத்தை நடத்துவேன் என்று சித்தராமையா பதவி ஏற்றபோது கூறினார். ஆனால் அவர் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை. அவர் பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
ஆட்சி அதிகாரம் உள்ளவரை தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பது சித்தராமையாவின் ஒரு அம்ச திட்டம் ஆகும். மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் நாகராஜ் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது கணக்கில் வராத நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கிடைத்தது. இந்த விஷயத்தில் ரமேஷ் ஜார்கிகோளி பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.