மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.64 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல்


மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.64 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Feb 2017 5:02 AM IST (Updated: 13 Feb 2017 5:02 AM IST)
t-max-icont-min-icon

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.64 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பை

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.64 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பனியனில் தங்கக்கட்டி

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த நரேஷ் மாட்டா(வயது32) என்ற பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது, அவர் அணிந்திருந்த பனியனில் பைகள் தைக்கப்பட்டு அந்த பைகளில் தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். மொத்தம் அந்த பனியனுக்குள் 6 தங்கக்கட்டிகள் மறைத்து வைத்து தைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து நரேஷ் மாட்டா கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், தங்கக்கட்டிகளை தானே உல்லாஸ் நகரில் வசித்து வரும் துணிக்கடைக்காரர் பிரேம் என்பவரிடம் ஒப்படைக்க வேண்டி, அவரது நண்பர் தன்னிடம் கொடுத்து அனுப்பியதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அதிகாரிகள் துணிக்கடைக்காரரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளையாட்டு பொம்மைக்குள்...

இதேபோல பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய ஜிதேந்திர குமார்(29) என்ற பயணியை சோதனையிட்ட போது, அவர் கொண்டு வந்த ஒரு விளையாட்டு பொம்மையின் கால் பகுதியில் 2 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து ஜிதேந்திர குமார் கைது செய்யப்பட்டார்.

மேற்படி 2 சம்பவங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.64 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கடந்த 1–ந்தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.3 கோடியே 95 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story