மன்மோகன் சிங் மிகச்சிறந்த மனிதர் உத்தவ் தாக்கரே புகழாரம்


மன்மோகன் சிங் மிகச்சிறந்த மனிதர் உத்தவ் தாக்கரே புகழாரம்
x
தினத்தந்தி 13 Feb 2017 5:04 AM IST (Updated: 13 Feb 2017 5:04 AM IST)
t-max-icont-min-icon

மன்மோகன் சிங் மிகச்சிறந்த மனிதர் என சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே அளித்த பேட்டியில் புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்பை,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மிகச்சிறந்த மனிதர் என சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே பிரபல ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் புகழாரம் சூட்டியுள்ளார்.

காங்கிரஸ் இல்லாத ஆட்சிக்கு ஆதரவு

மும்பை மாநகராட்சி தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அனைத்து தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே பிரபல ஆங்கில பத்திரிகைக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:–

கேள்வி: உங்களுக்கும், பா.ஜனதாவிற்கும் இடையிலான உறவில் இந்த அளவிற்கு விரிசல் வர காரணம் என்ன? தற்போது பா.ஜனதா, முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் உங்கள் உறவு எந்த நிலையில் உள்ளது?

பதில்: மத்தியில், மாநிலத்தில் நான் விரும்பிய காங்கிரஸ் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பெரிய அளவில் எந்த நிபந்தனையும் விதிக்காமல் பா.ஜனதாவிற்கு ஆதரவளித்தேன். கடந்த 2 ஆண்டுகளாக மாநிலத்தில் நடந்த மாநகராட்சி தேர்தல்களில் தொகுதி பங்கீட்டில் பா.ஜனதா எங்களிடம் நடந்து கொண்ட விதம் எங்கள் உறவில் பிளவை ஏற்படுத்தியது. மும்பை மாநகராட்சி தேர்தலில் அவர்கள் 144 வார்டு கேட்டது மிகப்பெரிய பின்னடைவானது.

மும்பையில் வேலையை காட்ட அவர்களிடம் ஒன்றுமில்லை. அவர்கள் எங்கள் மீது தான் தொற்றிக்கொள்ள வேண்டும். சிவசேனாவிற்கும், பா.ஜனதாவிற்கும் பொதுவான வி‌ஷயம் இந்துத்துவா தான். ஆனால் அவர்கள் நகர் பஞ்சாயத்து தேர்தலில் எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி வைத்தார்கள்.

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தன் மீதே தைரியமாக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி கொள்கிறார். மாநகராட்சி நிர்வாகம் முதல்–மந்திரியால் நியமிக்கப்பட்டது ஆகும். அவர்களை குற்றம் சாட்டுவதனால் முதல்–மந்திரி அவரையே மறைமுகமாக ஊழல்வாதி என கூறுகிறார்.

மன்மோகன்சிங் சிறந்த மனிதர்

கேள்வி: பா.ஜனதாவை விமர்சிப்பதன் மூலம் நீங்கள் காங்கிரசை மறைமுகமாக ஆதரிக்கிறீர்களா?

பதில்: நான் யாரையும் புகழ்ந்து பேசவில்லை. உண்மையை சொல்கிறேன். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மிகச்சிறந்த மனிதர் என்பதை முழுமையாக நம்புகிறேன். பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசுவதில்லை என கூறி தான் அவரை நாங்கள் விமர்சித்து இருக்கிறோம். ஆனால் ஒருபோதும் அவர் ஏமாற்றுக்காரர் அல்லது கொள்ளைக்காரர் என நாங்கள் கூறியதில்லை. மன்மோகன்சிங் ரெயின்கோட் அணிந்து கொண்டு குளித்ததாக மோடி கூறுகிறார். ஆனால் அவர் சோப்பு நுரையில்லாமல் குமிழிகளை விட்டுக்கொண்டு இருக்கிறார். தற்போது உள்ள அரசில் ஜனநாயகம் இல்லை. நாங்கள் அவர்களை விமர்சித்தால் எங்கள் மீது தேசதுரோகி என்ற முத்திரை குத்தப்படும். அவர்கள் கேட்ட வார்டுகளை ஒதுக்காததால் பட்னாவிஸ் மும்பையை, பாட்னாவுடன் ஒப்பிடுகிறார்.

ஒருவேளை அவர்கள் கேட்ட வார்டுகளை கொடுத்து இருந்தால் மும்பையை நியூயார்க் அல்லது லண்டனுடன் ஒப்பிட்டு பேசி இருப்பார். நல்ல நாட்களை பற்றி அவர்கள் பேசி வருகிறார்கள். நான் கேட்கிறேன், அந்த நாள் எப்போது வரும்?.

மத்திய, மாநில அரசே காரணம்

கேள்வி: நடக்க இருக்கும் தேர்தலில் யாருடன் உங்களுக்கு போட்டி இருக்கும்?

பதில்: இந்த கேள்விக்கான பதிலை தான் நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன். இதுவரை பா.ஜனதாவை போட்டியாக கருதினோம். ஆனால் தன் மீது ஊழல் குற்றசாட்டை கூறி முதல்–மந்திரி என் பணியை எளிமையாக்கிவிட்டார். உயர்மதிப்பு நோட்டுகள் தடைவிதிக்கப்பட்டதால் வழக்கமாக பா.ஜனதாவிற்கு ஆதரவளித்து வந்த வியாபாரிகள், தொழில் அதிபர்கள் கூட அவர்களுக்கு இந்தமுறை ஓட்டு போடமாட்டார்கள்.

கேள்வி: கார்கைய், பின்ஜால் அணைகள், கடற்கரை சாலை போன்ற நீங்கள் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லையே?

பதில்: நீங்கள் குறிப்பிட்ட அனைத்து திட்டங்களும் மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் தான் நிறைவேற்றப்படாமல் உள்ளன. சில திட்டங்களை நிறைவேற்ற பட்னாவிசின் மாநில அரசும் தடையாக உள்ளது. சாலைகளின் தரத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம். மிகச்சிறந்த சாலை வசதியை கொடுத்துள்ளோம்.

வெளிப்படை தன்மை

கேள்வி: மாநகராட்சியில் ஊழல் மற்றும் வெளிப்படை தன்மை இல்லை என எழுந்த குற்றச்சாட்டு குறித்த உங்கள் கருத்து?

பதில்: மும்பை மாநகராட்சியின் செயல்பாடுகள் வெளிப்படையாகவே நடக்கின்றன. நிலைக்குழு கூட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மாநகராட்சி கமி‌ஷனர் வெளியிடும் தகவல்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அமைச்சரவை கூட்டங்கள் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர் முன்னிலையில் நடக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன்.

இதேப்போல மந்திரிகள் அனைவரும் தங்களுக்கு வரும் அனைத்து கோப்புகளையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்பதை முதல்–மந்திரி கட்டாயமாக்க வேண்டும்.

இவ்வாறு உத்தவ்தாக்கரே பதிலளித்தார்.


Next Story