கோவில்கடவு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி
கோவில்கடவு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் இடுக்கி, காந்தலூர், கோவில்கடவு, பத்தடிபாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. மேலும் அணைகள், குளங்கள், கிணறுகள் வறண்டு வருகின்றன.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அதன்படி கோவில்கடவு பகுதியில் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர், கடந்த ஒரு வாரமாக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக பக்கத்து ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம்இந்த நிலையில் தற்போது சிறிய வாகனத்தில் தண்ணீர் தொட்டிகளை வைத்து பொதுமக்களுக்கு குடிநீரை பஞ்சாயத்து நிர்வாகம் வினியோகம் செய்து வருகிறது. இது குறித்து பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், கிணறுகள், குளங்கள் வறண்டதால் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை.
தற்போது தண்ணீர் தொட்டி வைக்கப்பட்ட வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்கிறோம். இது போதுமானதாக இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குடிநீர் பற்றக்குறையை போக்க மாற்று ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்வோம் என்றனர்.