குடிநீர் கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 14 Feb 2017 4:15 AM IST (Updated: 14 Feb 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்ணமங்கலம்,

பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். பேரூராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் கட்டணம் தற்போது மாதத்திற்கு 40 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் குடிநீர் கட்டணம் மாதம் 120 ரூபாய் வசூல் செய்யப்பட உள்ளது என பேரூராட்சி சார்பில் கடந்த மாதம் அறிக்கை வெளியிடப்பட்டது. இதுதொடர்பான நிறை, குறைகளை அறிக்கை வெளியிட்ட 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. குடிநீர் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோவர்த்தனன், முன்னாள் துணைத்தலைவர் குமார், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் பாரத், மஞ்சுளா, ஹயத் பாஷா, ஆனந்தன் மற்றும் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

செயல் அலுவலரிடம் மனு

பின்னர் குடிநீர் கட்டணத்தை உயர்த்துவதை கண்டித்தும், பேரூராட்சியில் கொசு, நாய் தொல்லை, சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்பதை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசனிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கணேசன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story