குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Feb 2017 3:30 AM IST (Updated: 14 Feb 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. பருவமழை தவறியதால் நீராதாரங்கள் வறண்டு கிடக்கும் நிலையில் நிலத்தடி நீர் மட்டமும் அதள பாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் பல பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் வினியோகம் முறையாக நடைபெறாத நிலையில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் மடத்துக்குளத்தை அடுத்த மைவாடி ஊராட்சி கருப்புசாமிபுதூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.

சாலை மறியல்

பின்னர் அதிகாரிகளிடம் குடிநீர் பிரச்சினை குறித்து தெரிவித்தனர். ஆனால் ஒன்றிய அதிகாரிகள் சரியான பதில் கூறவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வேண்டும் என கேட்டு கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் நின்றன.

ஆய்வு

இதுபற்றி தகவல்கிடைத்ததும் அங்கு வந்த மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிவக்குமார் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து குடிநீர் கேட்டு கோஷமிட்டனர். இதன் பின்னர் அதிகாரிகள் கருப்புசாமிபுதூருக்கு சென்று குடிநீர் வினியோகத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் குடிநீர் வினியோகம் விரைவில் சீராக நடைபெறும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story