வங்கி கணக்குடன் பான் கார்டு எண்ணை இணைக்காதவர்களின் காசோலை நிராகரிப்பு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி


வங்கி கணக்குடன் பான் கார்டு எண்ணை இணைக்காதவர்களின் காசோலை நிராகரிப்பு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 14 Feb 2017 3:45 AM IST (Updated: 14 Feb 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

வங்கி கணக்குடன் பான்கார்டு எண்ணை இணைக்காதவர்களின் காசோலையை வங்கிகள் நிராகரித்து வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

வருமான வரித் துறை விசாரணை

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி இரவு அறிவித்தார். இதனால் அந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொண்டனர். இதற்காக மத்திய அரசு கால அவகாசம் கொடுத்தது.

அதிக மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9–ந் தேதியில் இருந்து டிசம்பர் 30–ந் தேதிக்குள் வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களின் விவரங்களை வருமான வரித் துறைக்கு வங்கி நிர்வாகங்கள் அனுப்பியுள்ளன.

கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் மற்றவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்திருக்கிறார்களா? என்பதை தெரிந்து கொள்வதற்காக வருமானவரித்துறை விசாரித்து வருகிறது.

அபராத கட்டணம்

இந்த நிலையில் கோவையில் உள்ள சிலரின் வங்கி கணக்கில் போதுமான பணம் இருந்த போதிலும் அவர்கள் கொடுத்த காசோலைகள் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. இதற்கான காரணம் வங்கி அதிகாரிகளுக்கே தெரிய வில்லை. இது குறித்து விசாரித்த போது வங்கி கணக்குடன் பான் கார்டு எண் இணைக்காததே காரணம் என்பது தெரியவந்தது. மின்கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றுக்காக சிலர் கொடுத்த காசோலைகளும் திரும்பி வந்து விட்டன. இதற்காக அந்த வங்கி நிர்வாகங்கள் காசோலை திருப்பி அனுப்பியதற்கான அபராத கட்டணத்தையும் வங்கி கணக்கிலிருந்து எடுத்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கோவை கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

வங்கி கணக்குடன், பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்களை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே வங்கி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பின்னர் இது தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்பின்னரும் ஏறக்குறைய 30 சதவீதம் பேர் தங்கள் வங்கி கணக்குடன் பான் கார்டு எண்ணை இணைக்காமல் உள்ளனர். அவர்கள் அனைவரும் பான்கார்டு எண்ணை இணைக்க இந்த மாத இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பான்கார்டு எண்

ஆனால் கால அவகாசம் முடிவதற்குள் கோவையில் உள்ள சில வங்கிகள் பான்கார்டு எண்ணை இணைக்கவில்லை என்ற காரணத்தினால் போதிய பணம் இருந்த போதிலும் அவர்கள் வழங்கிய காசோலைகள் நிராகரிக்கப்பட்ட உள்ளன. காசோலைகள் எதற்காக திருப்ப அனுப்பப்பட்டன என்பது பற்றி பெரும்பாலான வங்கி அதிகாரிகளுக்கே தெரியவில்லை.

இதற்கு காரணம் வங்கி கணக்குடன் பான்கார்டு எண் இணைக்காதவர்களின் காசோலைகள் நிராகரிக்கப்படும் வகையில் கணினியிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை வங்கி நிர்வாகங்கள் மும்பையில் இருந்தவாறே செய்துள்ளன. இதனால் தான் இங்குள்ள வங்கி அதிகாரிகளுக்கே காசோலைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தெரிய வில்லை.

வழக்கு தொடரலாம்

வங்கி கணக்குடன் பான் கார்டு எண் இணைப்பதற்கு இந்த மாத இறுதி வரை கால அவகாசம் இருக்கும் போது அதற்கு முன்பாக காசோலைகளை திருப்பி அனுப்புவது கண்டிக்கத்தக்கது. பான் கார்டு இல்லாதவர்கள் வருமானவரித் துறையின் படிவம் 60–ஐ பூர்த்தி செய்து கொடுத்தால் வங்கியிலிருந்து பணம் எடுக்கலாம். அவர்களின் காசோலைகளை நிராகரிக்க கூடாது. ஆனால் அதற்கு வழியில்லாமல் காசோலைகளை திருப்பி அனுப்புவது வங்கியின் சேவை குறைபாடு. இதை எதிர்த்து வாடிக்கையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.

எனவே பான்கார்டு இல்லாதவர்கள் வருமானவரித்துறையின் படிவம் 60–ஐ பூர்த்தி செய்து கொடுத்து பணத்தை எடுக்க வங்கி நிர்வாகங்கள் அனுமதிக்க வேண்டும். இது தொடர்பான உரிய உத்தரவுகளை அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story