நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கர காட்டுத்தீ
நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கர காட்டுத்தீ தொழிலாளர்கள் உதவியுடன் அணைக்கும் பணி தீவிரம்
வால்பாறை
வால்பாறை நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கர காட்டுத்தீ பிடித்து எரிகிறது. அதனை அணைக்கும் பணியில் தொழிலாளர்கள் உதவியுடன் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நல்லமுடி பூஞ்சோலைவால்பாறையில் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை அமைந்துள்ளது. சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பகுதிக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் போதிய அளவு மழை பெய்யாததால், வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனையில் இருந்த செடி, கொடிகள் காய்ந்து இருந்தன. இதனிடையே நேற்று காலை 11 மணிக்கு அந்த பகுதியில் திடீரென்று காட்டுத்தீ பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால், தீ மள, மளவென பரவியது.
அணைக்கும் பணிஇது பற்றி தகவல் அறிந்ததும் மானாம்பள்ளி வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. மேலும் தீயணைப்பு வாகனம் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால், தீயை அணைப்பதில் தொய்வு ஏற்பட்டது.
தொடர்ந்து வனத்துறையினர் ஆனைமுடி எஸ்டேட் தொழிலாளர்களுடன் இணைந்து மருந்து அடிக்கும் எந்திரத்தில் தண்ணீரை நிரப்பி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீயை அணைக்கும் பணியில் தொழிலாளர்கள் உதவியுடன் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அவருடன் தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணிக்கு உதவி புரிந்து வருகிறார்கள்.
10 ஹெக்டேர்இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியில் பயங்கர காட்டுத்தீ பிடித்து எரிகிறது. இதனை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. தொழிலாளர்களின் உதவியுடன், பச்சை இலை, தழைகளை கொண்டும், மருந்து அடிக்கும் எந்திரங்கள் மூலமும் தீயை அணைக்க போராடி வருகிறோம். இந்த தீ விபத்தில் 10 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த செடி, கொடிகள் கருகி இருக்கலாம் என்றனர்.