பொக்காபுரம் அரசு பள்ளி சுற்றுச்சுவரை இடித்து தள்ளி காட்டு யானை அட்டகாசம்
பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியின் சுற்றுச்சுவரை காட்டு யானை இடித்து தள்ளியது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யவில்லை. வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன. மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் தண்ணீர் தேடி ஊருக்குள் வரத்தொடங்கி உள்ளன. இதனால் பொக்காபுரம் பகுதியில் வசித்து வரும் ஆதிவாசி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
நேற்று அதிகாலை பொக்காபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அங்குள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. பின்னர் பள்ளி வளாகத்தில் புகுந்த காட்டு யானை அங்கிருந்த மரங்களை வேரோடு சாய்த்து அட்டகாசம் செய்தது.
வனத்துறையினர் ஆய்வுஇதனை கண்ட அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து அந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த யானை அங்கிருந்து செல்லாமல் அப்பகுதியிலேயே தொடர்ந்து முகாமிட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் சுமார் 2 மணி நேரம் போராடி அந்த யானையை அங்கிருந்து விரட்டினர். இதனிடையே காட்டு யானை பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணதாசன் சிங்காரா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் மீண்டும் சுற்றுச்சுவரை கட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர்.