நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்ததாக நோட்டீஸ்: வீடுகளை இடிக்கக்கூடாது கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
ஈரோட்டில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்ததாக கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ள 150 வீடுகளை இடிக்கக்கூடாது என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி சதீஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஏராளமானோர் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.
ஈரோடு கள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 150–க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் மனோகரன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
ஈரோடு கள்ளியங்காடு பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாக நாங்கள் 150 வீடுகளில் குடியிருந்து வருகிறோம். கடந்த 2000–ம் ஆண்டில் நாங்கள் குடியிருக்கும் இடத்துக்கு தமிழக அரசால் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நகர்ப்புற குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனுமதி பெறப்பட்டு ஈரோடு மாநகராட்சி சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. தற்போது எங்கள் வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளது என்றும், எனவே நாங்கள் அனைவரும் வீடுகளை காலி செய்யவேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நாங்கள் அனைவரும் கூலிவேலை செய்து குடும்பம் நடத்தி வருவதால் வேறு இடங்களுக்கு சென்று எங்களால் வாடகை கொடுத்து குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளோம். எனவே எங்கள் வீடுகளை இடிக்காமல் நாங்கள் தொடர்ந்து அங்கு குடியிருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.
வறட்சி நிவாரணம்மொடக்குறிச்சி அருகே உள்ள அ.அனுமன்பள்ளி ஓம்சக்தி நகரை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் அனைவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் எவ்வித வேலைவாய்ப்பும் இல்லாமல் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்படுகிறோம். எனவே எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வறட்சி நிவாரணமாக ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்கவேண்டும்.
மேலும் நாங்கள் தனியார், பொதுத்துறை வங்கிகளில் மகளிர் சுய உதவிக்கு மூலம் சிறு கடன்கள் பெற்று உள்ளோம். இந்த கடன்களை செலுத்த உரிய கால அவகாசம் வழங்கவேண்டும்’ இவ்வாறு அவர்கள் கூறி இருந்தனர்.
குடிநீர் வசதிமொடக்குறிச்சி அருகே உள்ள கனகபுரம் ஜீவாநகர் பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகப்பகுதியில் நின்றுகொண்டு குடிநீர் வசதி வேண்டி கோஷங்கள் எழுப்பினார்கள். இதைப்பார்த்த போலீசார் அங்கு விரைந்து சென்று, ‘கலெக்டர் அலுவலகத்தில் கோஷங்கள் எழுப்ப அனுமதி கிடையாது. எனவே உங்களது கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் கொடுங்கள்’ என்றனர். இதையடுத்து அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
நாங்கள் 150 குடும்பத்தினர் ஜீவாநகர் பகுதியில் குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால், ‘மின் மோட்டார் பழுதாகி உள்ளதால் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை’ என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதனால் தண்ணீரின்றி நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
314 மனுக்கள்இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 314 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியின் கீழ் மருத்துவ நிதி உதவியாக 4 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் ராதாமணி, மாவட்ட வழங்கல் அதிகாரி சுப்பிரமணியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி எஸ்.வி.குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி என்.ராமச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சீ.குமார் உள்பட அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.