தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து கொழிஞ்சாம்பாறையில் 4–வது நாளாக உண்ணாவிரத போராட்டம்


தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து கொழிஞ்சாம்பாறையில் 4–வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2017 4:45 AM IST (Updated: 14 Feb 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து கொழிஞ்சாம்பாறையில் நேற்று 4–வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மூலத்தரா அணை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து பி.ஏ.பி. ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் 7¼ டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீர் கேரளாவுக்கு வழங்கப்படுகிறது. இந்த தண்ணீர் மணக்கடவு என்ற இடத்தில் கேரளாவுக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது.

அந்த தண்ணீரை மூலத்தரா அணையில் சேமிக்கப்பட்டு, வலது, இடது கால்வாய் மூலம் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு திறக்கப்படுகிறது. இந்த அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் இடது கால்வாய் பகுதியில் கேரள மக்களும், வலது கால்வாய் பகுதியில் தமிழர்களும் அதிகம் வசித்து வருகின்றனர்.

4–வது நாளாக உண்ணாவிரதம்

இந்த நிலையில் கடும் வறட்சியிலும், ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அந்த தண்ணீரை தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு வழங்காமல், கேரள மக்கள் வசிக்கும் இடது கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து முதல்–மந்திரி மற்றும் கேரள நீர்பாசன துறை மந்திரியை சந்தித்து மனு கொடுத்தும், ஆனால் அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழர்கள் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை பஸ் நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று 4–வது நாளாக நடந்த போராட்டத்தில் பள்ளிகளுக்கு செல்லாமல் மாணவ–மாணவிகள் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்தனர். மேலும் அவர்கள் தண்ணீர் வழங்க கோரி கோ‌ஷங்களை எழுப்பினார்கள். கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை என்பதை வலியுறுத்தி, மாடுகள் உண்ணாவிரத பந்தல் முன் கட்டப்பட்டு இருந்தன.

தடுப்பணைகள் வறண்டன

இதுகுறித்து வலது கால்வாய் பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:–

ஆழியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை, கேரள அரசு மீனாட்சிபுரத்தில் உள்ள மூலத்தரா அணையில் சேமித்து வைக்கிறது. பின்னர் தண்ணீர் வலது, இடது கால்வாய் வழியாக பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு திறக்கப்படுகிறது. இதில் வலது கால்வாய் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அதாவது கொழிஞ்சாம்பாறை, எருத்தேன்பதி, வடகரை ஆகிய ஊராட்சிகள் வலது கால்வாயால் அதிகம் பயன்பெறும் பகுதிகளாகும். இங்கு மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது.

இந்த நிலையில் கேரள நீர்பாசன துறை அதிகாரிகள், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்தனர். இதன்படி வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறக்கப்பட்டது. ஆனால் தண்ணீரை தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு வழங்க கேரள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் வடது கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் நிரம்பும் மோனாபாறை தடுப்பணை உள்பட 16 தடுப்பணைகள் வறண்டு காட்சி அளிக்கின்றன.

பாசனத்திற்கு தண்ணீர் இல்லை

நிலத்தடி நீர்மட்டமும் 1000 அடிக்கு கீழ் சென்று விட்டது. ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் பயன் இல்லை. வலது கால்வாயில் உள்ள கிளை வாய்க்கால் மூலம், கேரள மக்கள் வசிக்கும் பகுதிக்கு திருப்பி விட்டனர். இதுகுறித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, நீங்களே தடுத்து கொள்ளுங்கள் என்கிறார்கள். நாங்கள் சென்றால் அங்கே வன்முறை தான் நடக்கும்.

கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து தான் காய்கறிகள், பால் அதிகளவு கொண்டு செல்லப்படுகிறது. வலது கால்வாய் பாசனத்தை நம்பி 23 ஆயிரம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது. தண்ணீர் திறக்காததால் தற்போது எந்த பயிரும் சாகுபடி செய்யவில்லை. கால்நடைகளுக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லை.

தமிழர்களை வஞ்சிக்கும் கேரள அரசு

மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால் கூட, அந்த தண்ணீரை இடது கால்வாய் வழியாக கொண்டு சென்று குளம், குட்டைகள் மற்றும் தரிசு நிலங்களில் கூட சேமித்து வைக்கிறார்கள். இடது கால்வாயில் 60 கிலோ மீட்டர் தூரம் வரை நீட்டிக்கப்பட்டு விட்டது. ஆனால் வலது கால்வாயில் 32 கிலோ மீட்டர் நீட்டிக்க வேண்டிய நிலையில், வெறும் 16 கிலோ மீட்டர் தூரம் மட்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. பி.ஏ.பி. ஒப்பந்தத்தை மீறி கேரள அரசு இடது கால்வாயை நீட்டிப்பு செய்து வருகிறது. இதுகுறித்து கேள்வி கேட்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. தொடர்ந்து கேரள அரசு தமிழர்களை வஞ்சித்து வருகிறது.

தற்போது வலது கால்வாய் மூலம் தடுப்பணைகளுக்கு தண்ணீர் திறக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை எங்களிடம் யாரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தண்ணீர் திறக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story