தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் மாவட்ட கலெக்டரிடம் மனு


தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் மாவட்ட கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 14 Feb 2017 4:15 AM IST (Updated: 14 Feb 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரவிகுமாரிடம் மனு கொடுக்கப்பட்டது. மக்கள் குறைதீர்க்கும் நாள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட

தூத்துக்குடி,

தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரவிகுமாரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

அப்போது தூத்துக்குடி தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை நிறுவனர் நயினார் குலசேகரன் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தூத்துக்குடியில் உள்ள சில தொழிற்சாலைகள் கடந்த 41 ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தன. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் தண்ணீர் எடுக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அணையில் இருந்து கடந்த 41 ஆண்டுகளாக தொழிற்சாலைகள் தண்ணீர் எடுத்து வந்ததால் அரசுக்கு இதுவரை சுமார் ரூ.23 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த தொழிற்சாலைகள் மீண்டும் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

சுத்தமான குடிநீர்

தூத்துக்குடி அனல்மின் நிலைய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் அனல்மின் நிலைய குடியிருப்பு பகுதியான கேம்ப்–1, கேம்ப்–2 பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இந்த மக்களுக்கு மஞ்சள்நீர்காயல் பகுதியில் இருந்து மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் இருந்து மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை. அனல்மின் நிலையம் சார்பில், ஆழ்துளை கிணறு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே எங்களுக்கு முன்பு போல் மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

குற்றவாளிகள்

ஆதித்தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திலீபன் கொடுத்த மனுவில், ஓட்டப்பிடாரம தாலுகா பாஞ்சாலங்குறிச்சி பாஞ்சை இந்திரா நகரை சேர்ந்த கணபதி மகன் உலகநாதன், கடந்த 19.11.16 அன்று கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை நடந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியாக தகுந்த நடடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சாமி சிலைகள்

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கி வந்த சாமி சிலைகள், பூஜை செய்வதற்கு பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ளது. அவற்றை தொடர்ந்து பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வேம்பார் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், வேம்பார் வடக்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுமக்களாகிய நாங்கள், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி செய்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எங்களுக்கு அந்த ஊதியம் முறையாக வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வீடு கேட்டு...

தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மச்சேந்திரன் கொடுத்த மனுவில், தூத்துக்குடியில் தற்போது சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அதேபோல் குளங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் போது, குளங்களையும் மராமத்து செய்ய வேண்டும். இதன்மூலம் மழை காலங்களில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வடக்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் இந்த பகுதியில் சுமார் 6 ஆண்டுகள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது எங்களால் வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே எங்களுக்கு சுனாமி திட்டத்தில் கட்டப்பட்ட புதிய வீடுகளை வழங்கி உதவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story