ஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார்


ஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார்
x
தினத்தந்தி 14 Feb 2017 3:45 AM IST (Updated: 14 Feb 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

சமையல் செய்யும்போது ஸ்டவ் வெடித்து இளம்பெண் பரிதாபமாக இறந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது தாயார் புகார் செய்தார்.

ஸ்டவ் வெடித்து பலி

பேரம்பாக்கம் வாணியர் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 26). டிரைவர். இவருக்கும், வேலூர் மாவட்டம் ஆரூரைச் சேர்ந்த ஹேமமாலினி (20) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

நேற்று முன்தினம் ஹேமமாலினி, வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார். திடீரென ஸ்டவ் வெடித்து சிதறியது. அதில் இருந்த மண்எண்ணெய் ஹேமமாலினியின் சேலையில் பட்டு தீப்பிடித்துக்கொண்டது. உடல் முழுவதும் தீ பரவியதால் உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார்.

சாவில் சந்தேகம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் அலறி அடித்துக்கொண்டு வந்த அவரது பெற்றோர், மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் ஹேமமாலினியின் தாயார் ருக்மணி (38) தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக மப்பேடு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேமமாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஹேமமாலினிக்கு திருமணம் ஆகி 2½ ஆண்டுகளே ஆவதால் இது குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.


Next Story