பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு: சமாதானம் செய்ய முயன்ற முதியவர் கொலை


பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு: சமாதானம் செய்ய முயன்ற முதியவர் கொலை
x
தினத்தந்தி 14 Feb 2017 3:30 AM IST (Updated: 14 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்ற முதியவர் கீழே தள்ளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மின்வாரிய அலுவலகத்தில் வேலை

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த எண்டத்தூர் காலனியில் வசித்து வந்தவர் மணிவேல்(வயது 65). இவருடைய மகன் ராகவன். இவர், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கோபி(33) என்பவரிடம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ.33 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

அதில் ரூ.23 லட்சத்தை திருப்பிக்கொடுத்து விட்டதாகவும், மீதம் உள்ள ரூ.10 லட்சத்துக்கு பதிலாக கோபிக்கு மின்வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ராகவன் கூறியதாக தெரிகிறது. ஆனால் சொன்னபடி வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

சமாதானம் செய்ய முயன்றார்

இதனால் ஆத்திரம் அடைந்த கோபி, தன்னுடைய மனைவி பானுமதி(30), சகோதரி மல்லிகா(50) ஆகியோருடன் எண்டத்தூர் வந்து ராகவனிடம் தனக்கு தரவேண்டிய ரூ.10 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாயத்தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதை பார்த்த ராகவனின் தந்தை மணிவேல், தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது கோபி, அவரை பிடித்து தள்ளியதாக தெரிகிறது.

முதியவர் கொலை

இதில் கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த முதியவர் மணிவேல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக கோபியை கைது செய்து விசாரித்து வருகிறார்.

பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்ற முதியவர், கீழே தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story