தென்னை மரத்தில் கார் மோதி விபத்து கிராம பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பேர் பலி


தென்னை மரத்தில் கார் மோதி விபத்து கிராம பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 14 Feb 2017 3:06 AM IST (Updated: 14 Feb 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

இரேசாவே அருகே தென்னை மரத்தில் கார் மோதிய விபத்தில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிக்கமகளூரு,

இரேசாவே அருகே தென்னை மரத்தில் கார் மோதிய விபத்தில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிராம பஞ்சாயத்து உறுப்பினர்

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா ரங்கநாதபுரா கிராமத்தை சேர்ந்தவர் மது (வயது 35). கிராம பஞ்சாயத்து உறுப்பினர். இவர் நேற்று முன்தினம் இரவு அதேப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான பிரவீன்(32), யஷ்வந்த்(25), தர்ஷன்(28), சேத்தன்(22) ஆகியோருடன் இரேசாவே அருகே உள்ள ஓசூரு கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை மது தனது உறவினர் ஒருவரை இரேசாவே பஸ் நிலையத்தில் கொண்டு விடுவதற்காக தனது நண்பர்களுடன் காரில் இரேசாவே நோக்கி சென்றார்.

3 பேர் பலி

மது தனது உறவினரை இரேசாவே பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு திரும்பி ஓசூரு கிராமத்துக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை பிரவீன் ஓட்டினார். அவர்கள் ஓசூரு அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், சாலையோரத்தில் இருந்த தென்னை மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காரின் இடிபாடுகளிடையே சிக்கி மது, பிரவீன், யஷ்வந்த் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி இருந்தனர். தர்ஷன், சேத்தன் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சென்னராயப்பட்டணா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த இரேசாவே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரேசாவே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார் விபத்தில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story