திட்டள்ளி கிராமத்திற்குள் செல்ல சுதந்திர போராட்ட தியாகி துரைசாமிக்கு அனுமதி மறுப்பு


திட்டள்ளி கிராமத்திற்குள் செல்ல சுதந்திர போராட்ட தியாகி துரைசாமிக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 14 Feb 2017 3:12 AM IST (Updated: 14 Feb 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

திட்டள்ளி கிராமத்திற்கு செல்ல சுதந்திர போராட்ட தியாகி துரைசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மால்தாரேயில் ஆதிவாசி மக்கள் போராட்டம் நடத்தினர்.

குடகு,

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் திட்டள்ளி கிராமத்திற்கு செல்ல சுதந்திர போராட்ட தியாகி துரைசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மால்தாரேயில் ஆதிவாசி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

575 வீடுகள் அகற்றம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா திட்டள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டியிருப்பதாக கூறி 575 ஆதிவாசி மக்களின் வீடுகளை வனத்துறையினர் அகற்றினர். இதனால் வீடுகளை இழந்த ஆதிவாசி மக்களும் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முதற்கட்டமாக பாலலே, சோமவார்பேட்டையில் 522 பேருக்கு வீடுகள் கட்ட அரசு நிலம் ஒதுக்கி உள்ளது. ஆனால் ஆதிவாசி மக்கள், திட்டள்ளி பகுதியிலேயே வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக சுதந்திர போராட்ட தியாகியும், ஆதிவாசி மக்கள் போராட்ட குழு தலைவருமான துரைசாமி அறிவித்து இருந்தார். மேலும் போராட்டத்தில் கலந்துகொள்ள திட்டள்ளிக்கு வருவதாகவும் அவர் அறிவித்து இருந்தார். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க திட்டள்ளி கிராமத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனுமதி மறுப்பு

இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தது போல திட்டள்ளி கிராமத்தில் போராட்டத்தில் கலந்துகொள்ள துரைசாமி நேற்று காரில் திட்டள்ளி நோக்கி வந்தார். அவர் வருவதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார், மால்தாரே அருகே அவரது காரை மடக்கினர். மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் திட்டள்ளி கிராமத்திற்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுத்தனர்.

இதுகுறித்து அறிந்த திட்டள்ளி ஆதிவாசி மக்கள், மால்தாரே கிராமத்திற்கு விரைந்து சென்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அதே இடத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் ஆதிவாசி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் துரைசாமியை திட்டள்ளிக்கு செல்ல அனுமதித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார்கள். ஆனால் 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதால் அவரை திட்டள்ளிக்கு செல்ல அனுமதிக்க போலீசார் மறுத்தனர்.

கலெக்டரை மாற்ற வேண்டும்

இதையடுத்து அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த துரைசாமி கூறுகையில், ‘குடகு மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை வசதிகள் அமைத்து கொடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திட்டள்ளி கிராமத்தில் ஆதிவாசி மக்கள் வசித்து வந்த வீடுகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று கூறி வனத்துறையினர் அகற்றியுள்ளனர். ஆனால் காபி தோட்டம் வைத்து உள்ளவர்கள், பள்ளிகளை கட்டியிருப்பவர்களை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டு உள்ளனர்.

இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டர் ரிச்சர்டு வின்சென்ட் டிசாசோவும் பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஆதிவாசி மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறார். அவரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். திட்டள்ளி பகுதியில் வசித்து வந்த ஆதிவாசி மக்களுக்கு திட்டள்ளி பகுதியிலே வீடுகளை கட்டி கொடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

பரபரப்பு

திட்டள்ளி கிராமத்திற்கு செல்ல முடியாததால் அவர் சித்தாப்புராவிற்கு மீண்டும் திரும்பி சென்றார். அவர் சென்றவுடன் போராட்டம் நடத்திய ஆதிவாசி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story