சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சி முகாம் திரளானவர்கள் பங்கேற்பு


சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சி முகாம் திரளானவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 Feb 2017 4:15 AM IST (Updated: 14 Feb 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் நடைபெற்ற சிவில் சர்வீசஸ் பயிற்சி முகாமில் திரளானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்,

பயிற்சி முகாம்

மத்திய அரசு பணிகள் தேர்வு ஆணையம் (யூ.பி.எஸ்.சி.) ஆண்டு தோறும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வை சிறப்பாக எழுத வழிகாட்டும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இதில், சிவந்தி அகாடமியின் நோக்கம், செயல்பாடுகள் பற்றி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையாராஜ் விளக்கி கூறி, அனைவரையும் வரவேற்றார்.

பயிற்சி வகுப்பில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்), சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றியும் அதில் தேர்ச்சி பெறுவது பற்றியும் பேசினார்.

பொது அறிவு

நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக சென்னை அகில இந்திய வானொலி நிலைய செய்தி இயக்குனர் வி.பழனிச்சாமி கலந்து கொண்டு பேசியதாவது;–

சிவந்தி அகாடமி என்னும் புகழ்மிக்க நிறுவனத்தில் பயிற்சி பெற்று சிவில் சர்வீசஸ் தேர்வில் நான் வெற்றி பெற்றேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற, பொது அறிவு மிகவும் அவசியம். நாள்தோறும் செய்திதாள்களை வாசிப்பதன் மூலம் பொது அறிவை வளர்த்து கொள்ளலாம்.

அகழ்வு ஆராய்ச்சி

உதாரணமாக சமீபத்தில் ‘கீழடி’ என்ற இடத்தில் நடந்த அகழ்வு ஆராய்ச்சியை பற்றி நாளிதழில் படித்ததும், ‘கீழடி’ என்ற இடம் எந்த மாவட்டத்தில் உள்ளது? இது எந்த நாகரிகத்துடன் தொடர்புடையது? அகழ்வு ஆராய்ச்சியின் தந்தை யார்? முதன்முதலில் இந்தியாவில் அகழ்வு ஆராய்ச்சி எந்த ஆண்டில் நடைபெற்றது? அந்த ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டவை எவை? என பல கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளை தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஒரு செய்தியையும் தகவலாய் மாற்றி பொது அறிவுகளை வளர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு சென்னை அகில இந்திய வானொலி செய்தி இயக்குனர் வி.பழனிச்சாமி பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், போட்டி தேர்வு என்றால் என்ன? தேர்வு திட்டத்தை எப்படி அமைக்க வேண்டும்? தேர்வு தயாரிப்புக்கான சூழலை எப்படி தேர்வு செய்ய வேண்டும்? செல்போன், சினிமா, தொலைக்காட்சி, இன்டர்நெட், சமூக வலைதளங்கள் போன்றவைகளை இன்றைய இளைஞர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் விளக்கி கூறினார்.

பள்ளிக்கூட மாணவர்கள்

பயிற்சி வகுப்பில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், நெல்லை மாவட்டம் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பு படிக்கும் மாணவரான கீழ சுரண்டையை சேர்ந்த தவலோகவேல் மற்றும் அவருடைய தம்பி 7–ம் வகுப்பு மாணவரான வேலாயுதம் உள்பட பலர் ஆர்வமாக இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் ராமநாதன், சிவந்தி அகாடமி அலுவலர்கள் பாலகணேஷ், ஜெபஸ்டீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் சிவராஜூ நன்றி கூறினார்.


Next Story