பொதுஇடத்தில் அத்துமீறும் காதலர்களுக்கு உடனடி திருமணம் இந்து முன்னணியினர் அறிவிப்பு


பொதுஇடத்தில் அத்துமீறும் காதலர்களுக்கு உடனடி திருமணம் இந்து முன்னணியினர் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2017 4:30 AM IST (Updated: 14 Feb 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

காதலர் தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) பொது இடத்தில் அத்துமீறும் காதலர்களுக்கு, அதே இடத்தில் வைத்து உடனடியாக திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று வேலூர் இந்து முன்னணியினர் அறிவித்துள்ளனர்.

வேலூர்,

காதலர் தினம்

காதலர் தினம், இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி காதலர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள பரிசுகளை வாங்கி வருகிறார்கள். இதனால் வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரோஜாப்பூக்களின் விற்பனையும் அதிகமாக காணப்படுகிறது. காதலர் தினத்தை காதலர்கள் கொண்டாடும் வேளையில் ஒருபக்கம் காதலர் தினத்துக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. காதலர் தினத்தை கண்டித்து வேலூர் இந்து முன்னணியினர் போராட்டம் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் வேலூர் தோட்டப்பாளையத்தில் இந்து முன்னணியின் வேலூர் நகர அமைப்பாளர்கள் சார்பில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காதல் சின்னமான இதயம் படம் போன்ற காகிதத்தை தீ வைத்து எரித்தனர். மேலும் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து இந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் கூறியதாவது:-

காதலர் தினம் தமிழ் பண்பாட்டுக்கு உகந்தது அல்ல. அது, அன்னிய கலாசாரமாகும். இந்து முன்னணி காதலர்களுக்கு எதிரி அல்ல. காதலர் தின கொண்டாட்டத்தை தான் கண்டிக்கிறோம்.

திருமணம்

காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் அறுவறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டு சமுதாய சீர்கேடுகளுக்கு வழி வகுக்கின்றனர். இது போன்ற செயல்பாடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து முன்னணியும் காதலர் தின அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காதலர் தினத்தன்று பொது இடங்கள், கோவில்கள், பூங்காக்கள் ஆகிய இடங்களில் காதலர்கள் அத்துமீறி நடந்து கொண்டால் அதே இடத்தில் வைத்து அவர்களுக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்கப்படும். அந்தக் காதலர்கள் பற்றிய விவரங்கள் சுவரொட்டியாக அச்சடித்து ஒட்டப்படும். காதலர் தின வாழ்த்து அட்டைகளை எரிக்கும் போராட்டமும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story