திருச்சியில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி


திருச்சியில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
x
தினத்தந்தி 14 Feb 2017 4:15 AM IST (Updated: 14 Feb 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி தொடங்கி வைத்தார்.

திருச்சி,

கிரிக்கெட் போட்டி

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி திருச்சியில் ஜெ.ஜெ.என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று தொடங்கியது. போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் முதன்மை பயிற்சியாளருமான ஹேமங் பதானி தொடங்கி வைத்தார். 20 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், கோவை, காரைக்குடி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 18 பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் ஏற்கனவே மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாகும்.

நேற்று நடந்த முதல் நாள் போட்டியில் ஓசூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி அணியும், வேலூர் கான்கோர்டியா பள்ளி அணியும் மோதின. இதில் முதலில் ஆடிய ஓசூர் பள்ளி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வேலூர் பள்ளி அணி 15.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

விழுப்புரம் அணி படுதோல்வி

மற்றொரு போட்டியில் முதலில் ஆடிய கிருஷ்ணகிரி விஜய் வித்யாலயா பள்ளி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அடுத்து இலக்கை எதிர்நோக்கி ஆடிய காரைக்குடி கேந்த்ரிய வித்யாலயா பள்ளி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது.

இதேபோல இன்னொரு ஆட்டத்தில் சேலம் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி அணியும், விழுப்புரம் சிகா மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் சேலம் அணி வெற்றி பெற்றது. தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் மேல்நிலைப்பள்ளி அணியும், கோவை ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணியும் மோதிய போட்டியில் கோவை அணியும், திருவள்ளூர் வேலம்மாள் அணியும், தஞ்சாவூர் மகரிஷி வித்யாமந்திர் பள்ளி அணியும் மோதிய போட்டியில் திருவள்ளூர் பள்ளி அணியும் வெற்றி பெற்றன.

திருச்சி அணி வெற்றி

விழுப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், திருச்சி கமலாநிகேதன் பள்ளி அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த விழுப்புரம் பள்ளி அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது. அடுத்து இலக்கை எதிர்நோக்கி ஆடிய திருச்சி பள்ளி அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.


Next Story