பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2017 4:30 AM IST (Updated: 14 Feb 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரிமளம்,

மாணவ, மாணவிகள் தர்ணா

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்ததை கண்டித்தும், கூடுதலாக பெறபட்ட கட்டணத்தை மாணவ, மாணவிகளிடம் திருப்பி வழங்க வேண்டும் மற்றும் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக்கோரியும், பள்ளியில் கழிவறை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரியும் நேற்று 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி சந்தியா, திருமயம் தாசில்தார் ஜார்ஜ் கபிரேயன், அரிமளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

விரைவில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும், மாணவ, மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட தொகையின் மீதியை மாணவ, மாணவிகளிடமே வழங்கப்படும் என கூறப்பட்டதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story