பொன்னேரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை காணவில்லை சோழவரம் போலீசில் உறவினர் புகார்
பொன்னேரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமனை காணவில்லை என சோழவரம் போலீஸ் நிலையத்தில் அவரது உறவினர் புகார் அளித்து உள்ளார்.
சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சிறுணியம் பலராமன் கடந்த 8–ந் தேதி முதல் காணவில்லை. தொகுதி மக்கள் அவரை தேடி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சென்றால் அலுவலகம் மூடிகிடக்கிறது. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டால் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது. அவரது வீட்டிலும் அவரை காணவில்லை.
போலீசில் புகார்இந்த நிலையில் சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ.வின் உறவினர் பூதூர் கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி (38) என்பவர் சோழவரம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார்.
அதில் அவர், ‘‘எனது மாமா சிறுணியம் பலராமன் பொன்னேரி தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் கடந்த 8–ந் தேதி முதல் காணாமல் போய்விட்டார். நான் பல இடங்களில் தேடிப்பார்த்தேன். எங்கும் அவர் கிடைக்கவில்லை. எனது உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தேன். அங்கும் அவரை காணவில்லை. அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது. எனது மாமா பலராமனை கண்டுபிடித்து தரவேண்டும்’’ என கூறி இருந்தார்.