பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா உள்பட 3 பேர் ஆஜராக தனி கோர்ட்டு தயார்


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா உள்பட 3 பேர் ஆஜராக தனி கோர்ட்டு தயார்
x
தினத்தந்தி 15 Feb 2017 2:00 AM IST (Updated: 15 Feb 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா உள்பட 3 பேர் ஆஜராக தனி கோர்ட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா உள்பட 3 பேர் ஆஜராக தனி கோர்ட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி கோர்ட்டு நீதிபதி குன்கா தீர்ப்பு வழங்கி இருந்தார். தனி கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார். இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, தனி கோர்ட்டு கூறிய தீர்ப்பை உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. அதோடு சசிகலா உள்பட 3 பேரும் விசாரணை கோர்ட்டில்(பெங்களூரு தனி கோர்ட்டில்) உடனே சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து குற்றவாளிகள் ஆஜராக வசதியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டு கட்டிடத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. ஏற்கனவே இந்த கோர்ட்டு அறையில் வைத்துதான் சொத்து குவிப்பு வழக்கை நீதிபதி குன்கா விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா இன்று ஆஜராவார்

கோர்ட்டு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே பெங்களூரு நகர 48–வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி அஸ்வத் நாராயணா முன்னிலையில் சசிகலா உள்பட 3 பேரும் இன்று(புதன்கிழமை) ஆஜராவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் கோர்ட்டில் ஆஜரானதும் வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதி ஆய்வு செய்வார்.

அதைத்தொடர்ந்து அவருடைய உத்தரவின் பேரில் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். நேற்று மாலை வரை பெங்களூரு கோர்ட்டு வளாகங்களில் எந்த பரபரப்பான சூழலும் இல்லை. இன்று பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story