சோமங்கலம் அருகே பயங்கரம் மனைவியை வெட்டிக்கொலை செய்த விவசாயி போலீசில் சரண்


சோமங்கலம் அருகே பயங்கரம் மனைவியை வெட்டிக்கொலை செய்த விவசாயி போலீசில் சரண்
x
தினத்தந்தி 15 Feb 2017 2:00 AM IST (Updated: 15 Feb 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

சோமங்கலம் அருகே வாய்த்தகராறில் மனைவியை வெட்டிக்கொன்ற விவசாயி போலீசில் சரண் அடைந்தார்.

பூந்தமல்லி,

சோமங்கலம் அருகே வாய்த்தகராறில் மனைவியை வெட்டிக்கொன்ற விவசாயி போலீசில் சரண் அடைந்தார்.

போலீசில் சரண்

காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலத்தை அடுத்த அமரம்பேடு, அண்ணா தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 68), விவசாயம் செய்து வருகிறார். ராமகிருஷ்ணன் நேற்று சோமங்கலம் போலீஸ் நிலையம் சென்று, தனது மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ராமகிருஷ்ணனை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரது மனைவி நிர்மலா(58), தலையில் வெட்டப்பட்டு இரண்டாக பிளந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெட்டிக் கொலை

போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

ராமகிருஷ்ணன்-நிர்மலா தம்பதிக்கு 5 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ராமகிருஷ்ணனுக்கு அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் ஆடு, மாடுகள் புகுந்து பயிர்களை நாசம் செய்துவிடக் கூடாது என்பதற்காக நேற்று கணவன், மனைவி இருவரும் முட்களை வெட்டி அங்கு வேலி அமைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நிர்மலா நடத்தையிலும் ராமகிருஷ்ணனுக்கு சந்தேகம் இருந்துவந்தது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, இதில் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன் அவரது மனைவி நிர்மலா கையில் இருந்த அரிவாளை பிடுங்கி தலையில் ஓங்கி வெட்டினார். இதில் நிர்மலா அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

சோமங்கலம் போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story