பயிர் இழப்பீட்டுக்கான நிவாரண நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி தொடங்கியது சட்டசபையில் சித்தராமையா தகவல்


பயிர் இழப்பீட்டுக்கான நிவாரண நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி தொடங்கியது சட்டசபையில் சித்தராமையா தகவல்
x
தினத்தந்தி 15 Feb 2017 2:00 AM IST (Updated: 15 Feb 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

பயிர் இழப்பீட்டுக்கான நிவாரண நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி தொடங்கியதாக சட்டசபையில் முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

பயிர் இழப்பீட்டுக்கான நிவாரண நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி தொடங்கியதாக சட்டசபையில் முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

கடும் வறட்சி நிலவுகிறது

கர்நாடக சட்டசபையின் கூட்டத்தொடர் கடந்த 6–ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் 7–வது மற்றும் இறுதி நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்–மந்திரி சித்தராமையா பதில் அளிக்கையில் கூறியதாவது:–

கர்நாடகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. அதனால் தேசிய வங்கிகளில் உள்ள பயிர் கடனில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்யுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். இதை ஏற்று மத்திய அரசு கடனை தள்ளுபடி செய்தால் கூட்டுறவு வங்கிகளில் உள்ள பயிர் கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்ய மாநில அரசும் தயாராக உள்ளது.

பூஜ்ஜிய வட்டியில் கடன்

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 23 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 500 கோடி கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை பூஜ்ஜிய வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. எல்லா விவசாயிகளும் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினராக வேண்டும் என்ற நோக்கத்தில் இதற்கான பங்கு தொகையை அரசே செலுத்துகிறது.

விவசாயிகளின் பயிர் இழப்பீட்டுக்கு நிவாரண நிதி உதவியை அவர்களுடைய வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணி இன்று(நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. பீதர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பசவராஜின் வங்கி கணக்கில் நிவாரண உதவி ரூ.19 ஆயிரத்து 715–ஐ நான் வரவு வைத்து இந்த பணியை தொடங்கி வைத்துள்ளேன். வறட்சி நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு ரூ.1,782 கோடி வழங்குவதாக கூறியுள்ளது.

ரூ.450 கோடி நிதி விடுவிப்பு

இதில் கடந்த 5–ந் தேதி ரூ.450 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை மொத்தமாக விடுவிக்குமாறு மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியிடம் கூறியுள்ளேன். இதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மொத்தமாக மத்திய அரசு நிவாரண நிதியை ஒதுக்கினால் தான், விவசாயிகளுக்கு குறித்த காலத்தில் உதவி செய்ய முடியும். மாநிலத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகளை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் நமக்கு கூடுதலாக 1,900 மருத்துவ இடங்கள் கிடைக்கும். இது எங்களின் சாதனை அல்லவா?.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story